ஈரோடு: ஈமு கோழி, காந்த படுக்கையைத் தொடர்ந்து டிரம்ப்பின் 50% வரி உயர்வையும் வைத்து நூதன மோசடி?

Published On:

| By Pandeeswari Gurusamy

Fraud taking advantage of the US tax hike crisis

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவிகிதம் வரி விதித்துள்ள சம்பவம் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் நிலை உருவாகக் கூடும் என தொழில் துறையினர் அச்சத்தில் உள்ளனர். இந்த நெருக்கடியான சூழலை எப்படிச் சமாளிப்பது என அரசும் தொழில் துறையினரும் திணறி வரும் நிலையில் இந்த சூழலைப் பயன்படுத்தி அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் போன முன்னணி நிறுவனங்களின் ஆடைகள், பொருட்களை மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்கிறோம் என நூதன மோசடி நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அமெரிக்க அரசு இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தி உள்ளதால் கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் செயல்பட்டு வரும் பருத்தி மற்றும் பின்னலாடை உற்பத்தி பெருமளவு பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய இயலாத சூழலில் ஈரோட்டில் உள்ள பிரபல ஹால் ஒன்றில், சலுகை விலையில் ரூ.3000 மதிப்பிலான பொருட்களை ரூ.200 முதல் ரூ.300க்கும், ரூ.8000 மதிப்பிலான பொருட்களை ரூ.500க்கும் விற்பனை செய்யப்படும் என விளம்பரங்கள் வெளியாகின.

ADVERTISEMENT

இந்த விளம்பரத்தை நம்பி ஏராளமானோர் பொருட்களை வாங்க ஆர்வமுடன் குவிந்தனர். ஆனால் விளம்பரத்தைப் பார்த்து ஆசையாக வந்தவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். காரணம் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் பிராண்டட் பொருட்கள் இல்லை. பெரும்பாலும் பழைய சேதமடைந்த பொருட்கள் தான் விற்பனைக்கு இருந்தது.

இதனால் கடுப்பான வாடிக்கையாளர்கள் விற்பனையாளர்களிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். ஆனால் அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை. இதையடுத்து ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர்கள் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் வாடிக்கையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகத்தினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கொங்கு பகுதியில் மோசடிகள்

ADVERTISEMENT

கொங்குப் பகுதியை மையமாக வைத்து மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்தது. இதைத்தொடர்ந்து முதுகு வலி நீங்க காந்த படுக்கை என கூறி கோடிக்கணக்கில் நடந்த பண மோசடி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஈமு கோழி வளர்ப்பில் ஈடுபட்டால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏராளமானோர் தங்கள் பணத்தை இழந்தனர். அந்த வரிசையில் தற்போதைய அமெரிக்க வரி நெருக்கடியைப் பயன்படுத்தி ஈரோட்டில் பிரபல ஹாலில் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கும் என்ற மோசடி அரங்கேறி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share