மதுபோதையில் கார் பயணம் : சம்பவ இடத்தில் துடிதுடித்து 4 பேர் பலி!

Published On:

| By christopher

four died in kovai car accident

பிறந்த நாளை கொண்டாட மதுபோதையில் வாட்டர் வாஷ் செய்வதற்காக வந்த காரை எடுத்துச் சென்றபோது, அது மரத்தில் மோதியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சையை சேர்ந்த ஹரீஷ் (21), பிரகாஷ் (22) மற்றும் திருச்சியை சேர்ந்த சபரி (21)ஆகிய மூவரும் கோவை பேரூர் அடுத்த தெலுங்குபாளையம் பகுதியிலுள்ள தனியார் வாட்டர் வாஷ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். அவர்களுடன் கோவை தமிழ்நாடு வேளாண் பலகலைக் கழகத்தில் தோட்டக்கலைத் துறை மூன்றாமாண்டு பயிலும் மாணவர்களான தஞ்சையை சேர்ந்த பிரபாகரன் (19) மற்றும் அரியலூரை சேர்ந்த அகத்தியன் (20) ஆகியோரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் ஹரீஷுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் அனைவரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். பின்னர் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் வாட்டர் வாஷ் செய்வதற்காக வந்த டாடா அல்ட்ராஸ் காரை எடுத்து கொண்டு சிறுவாணி சாலையில் சென்று உள்ளனர். ஐந்து பேரும் மது அருந்திய சூழலில் காரை பிரகாஷ் அதிவேகமாக ஓட்டி உள்ளார்.

அந்த கார் பேரூர்- பச்சாபாளையம் இடையே செட்டிபாளையம் பிரிவை கடந்த போது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவற்காக பிரகாஷ் காரை ஒதுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர புளியமரத்தின் மீது அதிவேகமாக மோதி உள்ளது.

ADVERTISEMENT

இந்த விபத்தில் ஹரிஷ், பிரகாஷ், மற்றும் சபரியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்த தகவலறிந்த பேரூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ADVERTISEMENT

மேலும் படுகாயமடைந்த அகத்தியன் மற்றும் பிரபாகரன் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும், செல்லும் வழியிலேயே அகத்தியன் உயிரிழந்தார். பிரபாகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே பேரூர் துணைப்பிரிவு டிஎஸ்பி சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share