53 நாட்களுக்கு பின் ‘வெளியே தலை காட்டிய’ மாஜி துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்

Published On:

| By Mathi

Jagdeep Dhankhar

நாட்டின் துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ராஜினாமா செய்த பின்னர் பொதுவெளியில் தலைகாட்டாமல் இருந்த ஜெகதீப் தன்கர் இன்று துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார்.

2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ந் தேதி துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் பதவியேற்றார். அவரது பதவி காலம் 2027-ம் ஆண்டுதான் முடிவடையும்.

ADVERTISEMENT

ஆனால் மத்திய அரசுடன் ஏற்பட்ட மோதலால், கடந்த ஜூலை 21-ந் தேதி தமது பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெகதீப் தன்கர் தமது ராஜினாமா கடிதத்தில் மருத்துவ காரணங்களைக் குறிப்பிட்டிருந்தாலும் உண்மையான காரணம் என்ன என்பது வெளியாகவில்லை. மேலும் ஜெகதீப் தன்கர், மாநிலங்களவைத் தலைவர்; முறைப்படியான பிரிவு உபசார விழாவும் மாநிலங்களவையில் அவருக்கு நடத்தப்படவும் இல்லை.

அத்துடன் பதவியை ராஜினாமா செய்தது முதல் வெளியே எந்த ஒரு நிகழ்ச்சியிலும் ஜெகதீப் தன்கர் தலைகாட்டாமல் இருந்தார். இதனை முன்வைத்து இந்தியா கூட்டணி கட்சிகள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டும் வந்தன.

ADVERTISEMENT

இந்த பின்னணியில் இன்று, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழாவில் ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டார். டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு அருகே ஜெகதீப் தன்கர் அமர்ந்திருந்தார். துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ராஜினாமா செய்து 53 நாட்களுக்கு பின்னர் ஜெகதீப் தன்கர் வெளியே தலைகாட்டி இருப்பதுதான் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share