முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் காலமானார்!

Published On:

| By Balaji

முன்னாள் சபாநாயகரும் மூத்த வழக்கறிஞருமான பி.ஹெச்.பாண்டியன் இன்று காலமானார்.

முன்னாள் சபாநாயகரும், அதிமுகவின் அமைப்புச் செயலாளருமான பி.ஹெச்.பாண்டியன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். கிட்டத்தட்ட 45 நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று (ஜனவரி 3) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 74.

ADVERTISEMENT

பி.ஹெச்.பாண்டியனின் உடல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக அண்ணா நகரிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. பி.ஹெச்.பாண்டியன் உடலுக்கு இன்று மதியம் 1 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.

நாளை மாலை 3 மணியளவில் கீழ்பாக்கத்திலுள்ள கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

ADVERTISEMENT

நெல்லை மாவட்டம் கோவிந்தப்பேரியில் பிறந்த பி.ஹெச். பாண்டியன், சட்டப் படிப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். 1977ஆம் ஆண்டு தனது 32ஆவது வயதில் சேரன்மாதேவி தொகுதியிலிருந்து முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினரானர். அதன்பிறகு 1980, 1984 மற்றும் 1989 தேர்தல்களில் தொடர்ச்சியாக அதே தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989 சட்டமன்றத் தேர்தலின்போது ஜானகி அணியில் நின்று வெற்றிபெற்ற இருவரில் பாண்டியனும் ஒருவர். இளம் வயதிலேயே சட்டமன்ற துணை சபாநாயகராகவும், சபாநாயகராகவும் பதவி வகித்தவர். சபாநாயகராக பணியாற்றிய காலத்தில் அவரது சில முடிவுகள் சர்ச்சைக்குள்ளாகின.

1999ஆம் ஆண்டு திருநெல்வேலி தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு 2004ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். 2017ஆம் ஆண்டு சசிகலா முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியவுடன் அவருக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த பி.ஹெச்.பாண்டியன், ஜெயலலிதா மரணத்திலும் சந்தேகங்களை எழுப்பினார். அதன்பிறகு ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தவர், அணிகள் இணைந்த பின்பு அதிமுகவின் அமைப்புச் செயலாளராக பணியாற்றிவந்தார்.

ADVERTISEMENT

**இரங்கல்**

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “பி.ஹெச்.பாண்டியன் மரணமுற்றார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தோம். அதிமுகவின் தொடக்கக் காலத்தில் இருந்து கொள்கை உறுதிமிக்கத் தொண்டராகப் பணியாற்றியவர். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் அன்பையும் நன்மதிப்பையும் பெற்று அவர் ஆற்றிய பணிகள் அதிமுகவுக்குப் பேருதவி புரிந்தன. தமிழ்நாட்டின் மிகச்சிறந்த வழக்கறிஞராகவும், பேச்சாளராகவும், அரசியல் வல்லுநராகவும், சட்டப்பேரவை சபாநாயகராகவும், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினராகவும், கழக நாடாளுமன்ற குழுத் தலைவராகவும் பணியாற்றிய பி.ஹெச்.பாண்டியன், வரலாற்றின் பாகங்களில் இடம்பெறுவார். அவரது மறைவு அதிமுகவுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றால் அது மிகையில்லை. பி.ஹெச்.பாண்டியனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் அவர்களின் மறைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.தென் தமிழகத்தின் வலுவான மக்கள் பிரதிநிதியாக பாராளுமன்றத்திலும்,சட்டமன்றத்திலும் பணியாற்றி சட்டமன்ற சபாநாயகர் மாண்பை நடுநிலையோடு அதிகாரத்தை நிலை நிறுத்தி கடமையை தெளிவாக தனித்தன்மையுடன் செயல்பட்டவர்.அவரது இழப்பு பேரிழப்பு. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பி.ஹெச்.பாண்டியன் சபாநாயகராக பல்வேறு விஷயங்களில் மிகவும் துணிச்சலாக முடிவெடுத்தவர். சிறந்த கல்வியாளரும், வழக்கறிஞரும் ஆவார். என் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தவர். பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக நீதிக் கொள்கையையும், அதற்காக நான் நடத்திய போராட்டங்களையும் பல்வேறு தருணங்களில் அவர் வெளிப்படையாக பாராட்டியிருக்கிறார்.பி.எச். பாண்டியனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share