நாட்டின் துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா கூட்டணி’ வேட்பாளராக ஆந்திராவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.
துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9-ந் தேதி நடைபெற உள்ளது. ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமாவைத் தொடர்ந்து துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது.
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த, மகாராஷ்டிரா ஆளுநரான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா கூட்டணி’ ஆலோசனைக் கூட்டம் இன்று ஆகஸ்ட் 19-ந் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளராக ஆந்திராவைச் சேர்ந்த உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுவார் என அறிவித்தார்.
உச்சநீதிமன்றத்தில் 2007-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நீதிபதியாகப் பணியாற்றியவர் சுதர்சன் ரெட்டி.
சந்திரபாபு நாயுடுவுக்கு சிக்கல்?
தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்து திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது பாஜக கூட்டணி. இதற்கு பதிலடி தரும் வகையில், ஆந்திராவைச் சேர்ந்த சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக அறிவித்து பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது இந்தியா கூட்டணி. ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பதால் சுதர்சன் ரெட்டியை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆதரிக்குமா? அல்லது பாஜகவுடனான கூட்டணிக்காக ஆந்திராவைச் சேர்ந்தவரையே தோற்கடிக்க போகிறதா என்பது எதிர்பார்ப்பு.
நாளை மறுநாள் வேட்பு மனுத் தாக்கல்
இந்தியா கூட்டணியின் வேட்பாளரான சுதர்சன் ரெட்டி நாளை மறுநாள் வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளார். முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் துணை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நாளை மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளன.
