இலங்கை: டக்ளஸ் தேவானந்தா கைது- 1986-ம் ஆண்டு கொலை வழக்கில் இந்தியாவுக்கு நாடு கடத்தல்?

Published On:

| By Mathi

Douglas Devananda

இலங்கை முன்னாள் அமைச்சரும் ஈபிடிபி கட்சியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். நிழல் உலக தாதாவும் போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனுமான மக்கந்துரே மதூஷியுடனான தொடர்புக்காக டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்ட டக்ளஸ் தேவானந்தா, எந்த சிங்கள அரசு ஆட்சி செய்தாலும் அவர்களை ஆதரித்து அமைச்சராகி வந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் இலங்கை போலீசாரால் டக்ளஸ் தேவானந்தா நேற்று டிசம்பர் 27-ந் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக இலங்கை போலீசார் கூறுகையில், டக்ளஸ் தேவானந்தாவுக்கு இலங்கை அரசு பாதுகாப்பு காரணங்களுக்காக கொடுத்த துப்பாக்கியை நிழல் உலக தாதா மக்கந்துரே மதூஷிக்கு கொடுத்துவிட்டு துப்பாக்கியை காணவில்லை என நாடகமாடினார். போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் மக்கந்துரே மதூஷி. இது தொடர்பான விசாரணைக்கும் அவர் ஒத்துழைக்கவில்லை; இதனால் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

நாடு கடத்த கோருமா இந்தியா?

ADVERTISEMENT

இலங்கையைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா, மத்திய அரசு ஆதரவுடன் தமிழ்நாட்டில் தங்கி இருந்த போது 1986-ம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் தமிழக இளைஞர் திருநாவுக்கரசு என்பவரை துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தார். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தால் தேடப்படுகிற குற்றவாளி டக்ளஸ் தேவானந்தா. இந்த வழக்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

ஆனால் இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக அமைச்சராக மாறி மாறி டக்ளஸ் தேவானந்தா பதவி வகித்து வந்ததால் தமிழக இளைஞர் படுகொலை வழக்கில் அவரை கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்துவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாகவே இருந்தது.

ADVERTISEMENT

தற்போது அமைச்சராக இல்லாத டக்ளஸ் தேவானந்தா, நிழல் உலக தாதாக்களுக்கு அரசு கொடுத்த துப்பாக்கியை கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் எந்த ஒரு செல்வாக்குமே இல்லாத நபராக டக்ளஸ் தேவானந்தா உள்ளார்.

இந்நிலையில் சென்னை சூளைமேடு திருநாவுக்கரசு படுகொலை வழக்கில் தேடப்படுகிற குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவை நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் வகையில் இலங்கையிடம் நாடு கடத்தும் கோரிக்கையை மத்திய அரசு முன்வைக்குமா? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share