உச்ச நீதிமன்ற நிபந்தனையின்படி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (செப்டம்பர் 27) சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகவுள்ளார்.
பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து நேற்று மாலை செந்தில் பாலாஜி புழல் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார். அப்போது பேட்டியளித்த அவர், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இதை சட்டரீதியாக எதிர்கொண்டு மீண்டு வருவேன்” என்று கூறி முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து அண்ணா கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மரியாதை செலுத்தி விட்டு திரும்பும் போது, அமைச்சர் பொன்முடி செந்தில் பாலாஜியை தன்னுடைய காரில் முன்னிருக்கையில் அமரசொல்லி, தானே அழைத்துச் சென்று வீட்டில் விட்டு விடுவதாக அழைத்தார்.
ஆனால், இதை மறுத்த செந்தில் பாலாஜி பொன்முடியை காரில் ஏற்றி அனுப்பி வைத்தார். அப்போது செந்தில் பாலாஜியிடம் தைரியமாக இருங்கள் என்று சொல்லிவிட்டு புறப்பட்டார் பொன்முடி.
இந்த நிலையில் உச்ச நீதிமன்ற நிபந்தனையின்படி அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராகவுள்ளார்.
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், வாரம்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 11 மணி முதல் 12 மணிக்குள் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் துணை இயக்குனர் முன் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
அந்த வகையில் நேற்று சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி வெள்ளிக்கிழமையான இன்று அமலாக்கத்துறை துணை இயக்குனர் முன் ஆஜராகவுள்ளார்.
இதற்கிடையே செந்தில் பாலாஜி வழக்கில் வாதாடிய வழக்கறிஞர்களை நேரில் அழைத்து முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மூத்த வழக்கறிஞரும் திமுக எம.பி.யுமான என்.ஆர்.இளங்கோ தலைமையில் வழக்கறிஞர்கள் ராம்சங்கர், குணாளன், வைரவன், பார்த்தசாரதி, அழகிரி ஆகியோரை டெல்லியில் உள்ள இல்லத்திற்கு அழைத்து முதலமைச்சர் வாழ்த்து கூறியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
வேலைவாய்ப்பு : சென்னை ஐஐடியில் பணி!
ஹெல்த் டிப்ஸ்: உடற்பயிற்சிக்கு நேரமில்லை என்பது பொறுப்பற்ற பதில்!