பிளாக்கில் டிக்கெட் விற்பதை நிறுத்திவிட்டு விஜய் அரசியல் கலாச்சாரம் பற்றி பேசட்டும் – கோகுல இந்திரா பதிலடி

Published On:

| By Pandeeswari Gurusamy

பிளாக்கில் டிக்கெட் விற்பதை நிறுத்திவிட்டு பிறகு விஜய் அரசியல் கலாச்சாரம் பற்றி பேசட்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியில் பேசிய விஜய் அதிமுகவின் பெயரைக் குறிப்பிடாமல் விமர்சித்திருந்தார்.. டப்பா இஞ்சின், ஓட்டை எஞ்சின் என எவ்வளவு எஞ்சின் வந்தாலும், டாப் எஞ்சின் தவெகதான் என பேசி இருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா விஜய் பேச்சுக்கு கடும் எதிர்பபு தெரிவித்துள்ளார். செய்தி சேனல் ஒன்றில் பேசுகையில், “நாங்கள் தான் டாப் எஞ்சின்” என்று சொல்கிறார். “இரண்டு எஞ்சின் ஓடாது” என்று சொல்கிறார். நான் என்ன சொல்கிறேன் என்றால், டாப் எஞ்சின் போட்டு ஒழுங்காகத் திருச்சியிலிருந்து கிளம்பி கரூருக்கு வந்திருந்தால், அந்த 41 பேர் இறந்திருக்க மாட்டார்கள். எஞ்சினை ஸ்லோ பண்ணி ஸ்லோ பண்ணிச் சூட்டிங் எடுத்துவிட்டு வந்து, 41 பேர் உயிர் குற்றுயிரும் குலையுயிருமாக போனது பற்றிச் சிந்திக்காமலேயே பேசிக்கொண்டிருக்கிறார்.உடனே ஓடிப்போய் பிளைட்டில் பறந்து வீட்டைப் பூட்டிக்கொண்டு மக்களைச் சந்திக்காத ஒரு தம்பி அவர். பெரிய மனிதர் கிடையாது, ஒரு தம்பி.

இந்த மாதிரியான விமர்சனங்களை வைத்துத் தன்னைத்தானே மிகைப்படுத்திக்கொண்டு, எந்தக் கட்சியிலிருந்து யார் யார் கருத்து வேறுபாட்டோடு இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் ஆள் வைத்து பிடிக்கும் வேலையை இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் கூட இருக்கிறவர்களில் 90 சதவீதம் பேர் வேறு கட்சியிலிருந்து வந்து இன்று அவருக்கு ஜால்ரா போடுகிறவர்கள். எல்லோருமே மத்த கட்சியில் பயணித்து எல்லாம் அனுபவித்தவர்கள். ஆள் பிடிக்கிற வேலையை முதலில் பார்த்து, முதலில் அவர் கட்சியை ஸ்திரப்படுத்திக் கொள்ளட்டும்.

ADVERTISEMENT

நாங்கள் எல்லாம் உறுதியாக அவரவர்கள் சார்ந்த கட்சிக்கு, தலைமைக்கு விசுவாசமாக இருக்கக்கூடியவர்கள். அதனால் “டபுள் எஞ்சின் ஒரே இடத்தில் இருக்கக் கூடாது, ஓடாது” என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். நாங்களும் சொல்றோம்.. அதிமுக தலைமையில் ஒரு ஆட்சி அமைக்கப் போகிறோம்.

இவர் வந்து “மக்களுக்கு நல்லது செய்யப் போகிறேன்” என்றால், ஆக்கபூர்வமான எங்கள் தவெகவின் கொள்கை இது, எங்களுடைய நிலைப்பாடு இது என்று பேசாதவர். பத்திரிகைத் துறையைப் பார்க்காதவர், பத்திரிகை நண்பர்களைச் சந்திக்காதவர், தன்னுடைய நிலைப்பாடுகளை மிகத் தெளிவாகச் சொல்வதற்கு அஞ்சக்கூடியவர்.

ADVERTISEMENT

அவர் அவரைப் பற்றி பேசிக்கொள்ளலாம், அதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு முன்பாக, அதிமுகவில் பயணம் செய்த அமைச்சர்களாக இருந்தவர்களை எல்லாம் பக்கத்தில் வைத்துக்கொண்டு விமர்சனம் செய்கிறார் என்றால், ஆள் பிடித்துக்கொண்டு யார் வேண்டுமானாலும் வரலாம் என்று சொல்லிவிட்டு, இவர் ஊழலைப் பற்றி எல்லாம் பேசவே கூடாது. இவர் ஊழலைப் பற்றி பேசவே கூடாது.

முதலில் பிளாக்கில் என் படத்திற்கு டிக்கெட் வாங்காதீர்கள், அதிகமாகப் பணம் கொடுத்து டிக்கெட் வாங்காதீர்கள். என்னுடைய கட்டவுட்டிற்கு பால் அபிஷேகம் பண்ணாதீர்கள். ஒரு தியேட்டரில் எவ்வளவு பேர் அந்த ஷோவை பார்க்க முடியுமோ அவர்கள் மட்டும் பார்த்தால் போதும். பிளாக்கில் எதுவும் செய்யாதீர்கள். அந்தக் கலாச்சாரத்தில் இருந்து வெளியில் வரட்டும். என்ன வேண்டுமானாலும் பேசட்டும்.

மக்களுக்கு எப்பொழுதும் எந்த நேரத்திலும் உறுதுணையாக இருக்கக்கூடியவர். 41 பேர் இறந்து போனார்கள் என்றால், அந்த மக்களுக்கு உடனடியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவி செய்யக்கூடிய களத்தில் இருக்கக்கூடியவர்களாகவும் அண்ணா திமுக இருந்தது. தலைமையும் அவர்களை நேரடியாகச் சந்திக்கக் கூடிய சக்தியாக நாங்கள் இருக்கிறோம். மாயை எப்பொழுதும் மாயையாகவே இருந்துகொண்டிருக்கும் என்றார்.

விஜய் வெளியில் வரவில்லை என்று சொல்கிறீர்களே? ஒவ்வொரு வீட்டிலிருந்தும் தேர்தல் நாளில் ஒவ்வொரு விஜய்யும், விஜியும் வெளியில் வருவார்கள் என்று சொன்னது தொடர்பான கேள்விக்கு, “அவருடைய எண்ணங்கள், நம்பிக்கை பற்றி பேசுவதில் நாங்கள் கருத்து வேறுபாடு சொல்லவில்லை. ஆனால் எங்களை நீங்கள் விமர்சனம் செய்யாதீர்கள். உங்களுடைய திறமைகள், உங்கள் கட்சியின் கொள்கைகள் குறித்து பேசுங்கள். வேறு கட்சியிலிருந்து பொறுப்பாளர்களாக, அமைச்சர்களாக இருந்தவர்கள் யாருமே இங்கு வராதீர்கள். தனியாக எங்களுக்காகவே நேரடியாக முதல் முறையாக நேரடியாக வரக்கூடியவர்களை வைத்து நான் கட்சியை நடத்திக் காண்பிக்கிறேன் என்று சொல்வதை விட்டுவிட்டு, அந்தக் கட்சியிலிருந்து செங்கோட்டையன் வருவாரா? இந்தக் கட்சியிலிருந்து ஜேசிடி பிரபாகர் வருவாரா? இந்தக் கட்சியிலிருந்து அவன் என ஆள் பிடித்துக்கொண்டு கொண்டிருக்கிறார். இங்கு எல்லாமே கொழுத்து, எல்லாமே அனுபவித்து எல்லா பதவி சுகங்களையும் பெற்று “நான் புரட்சித் தலைவர் காலத்திலிருந்து இருக்கக்கூடியவர்” என்று சொன்ன செங்கோட்டையன் எல்லாம் இருக்கும்போது, இவர் இந்த மாதிரி பேசுவது கேலிக்கூத்தாக உள்ளது. அவர்கள் தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பதிலேயே இன்னொரு கட்சியிலிருந்து திருடிய, களவாடிய ஆட்களை உட்கார வைத்துக்கொண்டு பேசுகிறார்கள்.

நாங்கள் களத்தில் மக்களைச் சந்திக்கக் கூடிய வகையில் மாபெரும் கூட்டணி அமைத்து நாங்கள் செல்வாக்கோடு வரவேண்டும் என்ற பயணத்தில் எங்களது கவனத்தைச் செலுத்துகிறோமே தவிர, நாங்கள் மாட மாளிகையில் உட்கார்ந்து கொண்டு அறிக்கை விடக்கூடிய அரசியல்வாதியாக நாங்கள் இருக்கவில்லை. சுனாமி என்றால் முதல் ஆளாக அம்மா போய் நின்றார்கள். கன்னியாகுமரியில் ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. ஒரு துப்பாக்கி சூடு என்றால் சட்டமன்றம் நடந்தாலும் பரவாயில்லை என மண்டைக்காட்டில் உடனே போய் நிற்கக்கூடிய.. மக்களுக்காக உடனே ஓடிய தலைவர்களை கொண்ட அப்படிப்பட்ட வழியில் வந்த கட்சியாக நாங்கள் இருக்கின்றோம்.

அதனால் களத்தில் யாருக்கு எந்தப் பாதிப்பு இருந்தாலும் உடனடியாக மக்களைச் சந்திக்கக்கூடிய தைரியமுள்ள ஆட்களாக இருக்கக்கூடிய எங்களைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு தம்பிக்கு எந்த விதமான அருகதையும் இல்லை என்பதை நான் மிகத் தெளிவாகச் சொல்லிக்கொள்கிறேன் என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share