“சனாதானிகள் நீதிபதிகளாக வரலாம். ஆனால், அவர்கள் சனாதானத்தை நீதிமன்றத்துக்குள் கொண்டு வந்து விட வேண்டாம். ஆளுநர் ரவி போலவே ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பும் திமுகவுக்கு பலம்” என்று முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் தெரிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் (ஓய்வு பெற்ற) முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் திருநெல்வேலியில் இன்று (டிசம்பர் 13) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தற்போது உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் உள்ள திருப்பரங்குன்றம், திண்டுக்கல், மயிலாடும்பாறை (கன்னியாகுமரி) ஆகிய மூன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளையும், தலைமை நீதிபதி அவர்கள் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, உடனடியாக வேறு நீதிபதிக்கு அமர்வுக்கு மாற்ற வேண்டும். இதுதான் தற்போது நிலவும் பதற்றத்தைத் தணிப்பதற்கான நடைமுறை சாத்தியமான உடனடித் தீர்வாகும்.
நீதிபதிகள் மாற்றப்பட்ட முந்தைய வழக்குகள் விபரங்கள்
நீதிபதிகளை மாற்றுவதற்குச் சட்டத்தில் வழிமுறை உள்ளது. இது புதிதல்ல. ஏற்கனவே, நீதிபதி பிரேமானந்தா அவர்களின் வழக்கில், பெஞ்ச் மாற்றப்பட்டது. மேலும், நீதிபதி கண்ணன், ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் என்று கருணாநிதி அவர்கள் ஆட்சேபனை தெரிவித்தபோது, அவர் பஞ்சாபிற்கு மாற்றப்பட்டார். அதேபோல, ராஜ இளங்கோ தி.மு.க. ஆதரவாளர் என்று ஆட்சேபனை எழுந்தபோது, அவர் ஹைதராபாத்திற்கு மாற்றப்பட்டார். எனவே, வழக்குகளை அல்லது வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியை மாற்றுவதற்கான அதிகாரம் தலைமை நீதிபதிக்கு உண்டு. இப்படி செய்தால் இம்பீச்மண்ட் கூட நீர்த்து போய் விடும் என்றார்.
நீதித்துறைக்குள் சாதி மற்றும் சனாதானம் இருக்கிறதா என்பது குறித்த கேள்விகளுக்கு, “சுதந்திரம் அடைந்த பின் கடந்த 75 ஆண்டுகளாக, உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் உள்ளிட்ட உயர்நீதித்துறை முழுவதும் உயர் சாதியினரின் ஆதிக்கத்தில்தான் உள்ளது. கொலீஜியத்திற்கு முன்னும் பின்னும், காங்கிரஸ் ஆட்சியிலும் அதுதான். ஆனால் 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு விசேஷமான நிலை என்னவென்றால், உயர் சாதியினரிலேயே சனாதானிகள் உள்ளே வந்திருக்கிறார்கள்.
சனாதானிகள் வரலாமா? சனாதானிகள் நீதிபதிகளாக வரலாம். ஆனால், அவர்கள் சனாதானத்தை நீதிமன்றத்துக்குள் கொண்டு வந்து விட வேண்டாம் என்றார்.
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், இதுபோன்ற நீதிபதிகளின் தீர்ப்புகள் ஆளும் கட்சிக்கு மறைமுக அழுத்தத்தைக் கொடுக்குமா என்ற கேள்விக்குப் பதிலளித்த நீதிபதி ஹரி பரந்தாமன், “ஆளும் கட்சிக்கு மிகப்பெரிய பலத்தை அளிக்கும். “ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் எப்படி தி.மு.க.வுக்குப் பலமளிக்கிறாரோ, அதேபோல்தான் நீதிபதி சுவாமிநாதனின் தீர்ப்பும் தி.மு.க.வுக்குப் பலமளிப்பதாக நான் கருதுகிறேன்” என்றார்.
மேலும், தமிழ்நாட்டில் முருகன் பெருந்தெய்வமாகக் கருதப்படுகிறார். வடநாட்டில் ஸ்கந்தர் சிறு தெய்வமாகக் கருதப்படுகிறார். வடக்கே ஸ்கந்தருக்குத் திருமணமாகவில்லை; இங்கு நம் முருகப்பெருமானுக்கு இரண்டு மனைவிகள். இங்கேயுள்ள முருக பக்தர்கள் ‘அரோகரா’ என்று முழக்கமிடுகிறார்கள். இங்கே ‘ஜெய் ஸ்ரீராம்’ என்பது பொருந்தாது.
இது போன்ற முரண்பாடுகளால் நிச்சயம் எந்த ஜனநாயக சக்திகளும் இந்தத் தீர்ப்பை ஏற்க மாட்டார்கள். இந்தப் பிரச்சனை ஜனநாயக வழியில் வெளிப்படையாகப் பேசப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
