முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் காலமானார் : யார் இவர்?

Published On:

| By Kavi

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் இன்று (ஆகஸ்ட் 5) காலமானார்.

ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்தவர் சத்ய பால் மாலிக். உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ADVERTISEMENT

ஜூன் மாதத்தில் சிறுநீரக பிரச்சினை காரணமாக சிகிச்சை பெறுவதாக சத்ய பால் மாலிக் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

கடந்த ஜூலை 9ஆம் தேதி ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல்நலம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின.

ADVERTISEMENT

இந்தநிலையில் இன்று (ஆகஸ்ட் 5) சிகிச்சை பலனின்றி சத்ய பால் மாலிக் உயிரிழந்தார்.

யார் இவர்?

ADVERTISEMENT

50 ஆண்டுகளாக இந்திய அரசியலில் பல்வேறு கட்சிகளில் பயணித்தவர். முதலில் முன்னாள் பிரதமரான சௌத்ரி சரண் சிங்கின் பாரதிய கிராந்தி தளத்தின் வேட்பாளராக 1974இல் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றார்.

அதன்பிறகு 1975ல் லோக் தளம் கட்சியின் தலைவராக இருந்தார். 1984ல் காங்கிரஸில் சேர்ந்தார். காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட மாலிக் போஃபர்ஸ் ஊழல் காரணமாக தனது எம்.பி.பதவியை ராஜினாமா செய்துவிட்டு, காங்கிரஸில் இருந்து விலகினார்.

இதையடுத்து ஜன் மோர்ச்சா  என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். பின்நாளில் தனது கட்சியை வி.பி.சிங் நடத்தி வந்த ஜனதா தள கட்சியுடன் இணைத்தார். 1990ல் வி.பி. சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராகவும் இருந்தார்.

2004ல் பாஜகவில் இணைந்த மாலிக் உத்தரப் பிரதேசத்தில் தீவிரமாக செயல்பட்டார். பாஜகவில் விவசாய அணி செயலாளராக செயல்பட்ட அவர், 2017ஆம் ஆண்டு அக்டோபரில் பிகார் ஆளுநராக பதவியேற்றார்.

மேகாலயா ஆளுநராகவும் பணியாற்றியிருக்கிறார். 2018ல் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இவர் அங்கு பதவியில் இருந்தபோதுதான் 2019ல் புல்வாமா தாக்குதல் நடந்து 40க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

நாட்டையே உலுக்கிய இந்த கொடூர தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி மீதே அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்தார். ‘ராணுவ வீரர்கள் தாங்கள் செல்வதற்கு அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் விமான கேட்டனர். ஏனென்றால் அவ்வளவு பெரிய கான்வாய்கள்  சாலையில் செல்ல முடியாது. அதனால் 5 விமானங்கள் தான் கேட்டனர். ஆனால் கொடுக்கவில்லை. என்னிடம் கேட்டால் கொடுத்திருப்பேன். 

இந்த தவறால் தான் அன்று தாக்குதல் நடந்தது. இது நம்முடைய தவறு என்று பிரதமர் மோடியிடம் சொன்னேன். விமானங்கள் கொடுத்திருந்தால் இப்படி ஆகியிருக்காது என்றேன். ஆனால் அவர் பேசாமல் அமைதியாக இருக்குமாறு கூறுவிட்டார்” என்று தெரிவித்திருந்தார்.

மேகாலயா ஆளுநராக இருந்தபோதும் பிரதமர் மோடி மீது அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்தார். ‘பிரதமர் மோடி மிகவும் திமிரு பிடித்தவர்… 500 விவசாயிகள் இறந்துவிட்டார்கள் என்று மோடியிடம் சொன்னபோது, எனக்காகவா இறந்தார்கள் என்று கேட்டார். நீங்கள்தானே பிரதமர் என்று சொன்னதும், அமித்ஷாவிடம் பேச சொன்னார். அமித்ஷாவிடம் சொன்னது போது, விடுங்கள் அவர் தெரியாமல் பேசிவிட்டார் என்றார்’ என கூறியிருந்தார் சத்ய பால் மாலிக்.

இவ்வாறு மோடி அரசாங்கம் மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தவர்.

இந்தநிலையில் ஜம்மு-காஷ்மீரின் தோஹா மாவட்டம், கிஷ்த்வார் வட்டத்தில் உள்ள செனாப் ஆற்றில் கிரு நீர்மின் திட்ட கோப்புகளுக்கு கையெழுத்திட 300 கோடி ரூபாய் சத்யபால் மாலிக் லஞ்சம் வாங்கியதாக 2024ல் அவருக்கு தொடர்பான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share