டெல்லியின் முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றுள்ள நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அதிஷி இன்று (பிப்ரவரி 23) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். atishi chosen leader opposition
டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி வெளியானது. 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியை பாஜக கைப்பற்றியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்த தேர்தலில் தோல்வியை சந்தித்தனர். இந்தநிலையில், பாஜகவைச் சேர்ந்த ரேகா குப்தா கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி டெல்லி முதல்வராக பதவியேற்றார்.
இந்தநிலையில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், “டெல்லி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிஷிக்கு வாழ்த்துக்கள். டெல்லி மக்களின் நலனை முன்னிறுத்தி சட்டமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்படும்” என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் இருவரும் பெண் என்பது டெல்லி அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது. atishi chosen leader opposition