வங்க கடலில் வலுவிழந்த டிட்வா புயல் சென்னையை விட்டு நகராமல் தொடர்ந்து நிலை கொண்டிருப்பதால் கனமழை கொட்டித் தீர்க்கிறது. சென்னை பாரிமுனையில் கடந்த 24 மணிநேரத்தில் 26.5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திய டிட்வா புயல், தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்தது. ஆனால் சென்னைக்கு அருகே டிட்வா புயல் வலுவிழந்தது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய மாஜி டிட்வா, சென்னையை விட்டு நகராமல் நிலை கொண்டிருக்கிறது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் சராசரியாக 13.4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
- பாரிமுனையில் 26.5 செ.மீ.
- எண்ணூரில் 26.4 செ.மீ
- திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸில் 23.1 செ.மீ
- பேசின் பாலத்தில் 20.7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
சென்னை மாநகரில் இடைவிடாது கொட்டும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனை அகற்றும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகரின் சுரங்க பாதைகளில் தேங்கிய மழை நீர் அனைத்து இடங்களிலும் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டுவிட்டன.
சென்னையில் வெள்ள நீர் தேங்கிய இடங்களில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். நீர்வழிப் பாதைகளின் நிலை குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
சென்னையில் தற்போதும் அண்ணாசாலை, சாந்தோம், மயிலாப்பூர், எம்.ஆர்.சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்று டிசம்பர் 2-ந் தேதி அதிகாலை முதல் சாரல் மழை பெய்த நிலையில் தற்போது மிதமான மழை பெய்கிறது.
