டெல்லியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் எம்.பி, மற்றும் தனபால் எம்.பி. ஆகியோர் சந்தித்து பேசினர்.
டெல்லியில் முகாமிட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று பிற்பகல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அப்போது, கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற கோரி நிர்மலா சீதாராமனிடம் எஸ்.பி. வேலுமணி மனு அளித்தார். இந்த சந்திப்பின் போது அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி.சண்முகம் மற்றும் தனபால் எம்.பி. ஆகியோர் உடனிருந்தனர்.
கோவை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக மத்திய அரசு கேட்கும் விவரங்களை தமிழ்நாடு அரசு கொடுத்தால் பரிசீலனை செய்வோம் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் இன்று இரவு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை (சிபிஆர்) எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் சந்தித்தனர். இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.
இச்சந்திப்பை தொடர்ந்து துணை ஜனாதிபதி மாளிகையில் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது.
