கோவையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று சந்தித்தார். S.P. Velumani Meets RSS Chief Mohan Bhagwat
கோவையில் இன்று ஜூன் 23-ந் தேதி நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் நேற்று மாலை கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் இருந்து சுண்டக்காமுத்தூர் சென்ற மோகன் பகவத், அங்கு பண்ணை வீடு ஒன்றில் தங்கினார்
பேரூர் ஆதீனம் மடத்தில் இன்று காலை நடைபெறும் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் நூற்றாண்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மோகன் பகவத் பங்கேற்கிறார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக பேரூர் ஆதீனம் மடத்தில் இன்று காலை நடைபெற்ற சிறப்பு பூஜையில் மோகன் பகவத் கலந்து கொண்டார். இந்த பூஜையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக பேரூர் ஆதீன மட நிகழ்வுகளை பதிவு செய்வதற்காக கேமராமேன்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். இன்றைய சிறப்பு பூஜையின் போது ஆதீன மடத்தின் கேமராமேன் உள்ளிட்டவர்கள் அனுமதிக்கப்படவில்லையாம். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கேமராமேனுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதாம்.
பேரூர் மடத்தில் நடைபெற்ற சிவபூஜையில் மோகன் பகவத்துடன் கலந்து கொண்ட பின்னர் எஸ்பி வேலுமணி மட்டும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் என்கின்றன தகவல்கள்.
