நான் என்ன தப்பு செஞ்சேன் – அங்கலாய்த்த ஜெயக்குமார்

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத்தில் அடுத்த சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக – பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் அரசியலை விட்டு விலகுவேன் எனத் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயபுரம் தொகுதியில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்த ஜெயக்குமார், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார். இந்நிலையில், சென்னை ராயபுரத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,”2001-ல என்னை ஜெயிக்க வச்சீங்க. 2006, 2011 தேர்தல்களிலும் ஜெயிக்க வச்சீங்க. ஆனா 2021 தேர்தலில் கைவிட்டுட்டீங்களே…

ADVERTISEMENT

நான் என்ன தப்பு செய்தேன் சொல்லுங்க? ஊரை அடித்து உலையில் போட்டேனா? கட்டப்பஞ்சாயத்து பண்ணேனா? கள்ளச்சாராயம் காய்ச்சினேனா? ரவுடித்தனம் செஞ்சேனா? மாமூல் கேட்டேனா? இல்லை அடாவடித்தனம் செஞ்சு பொறுக்கித்தனம் பண்ணேனா? சொல்லுங்க பார்க்கலாம். யாராவது நான் அப்படிச் செய்தேன் என்று சொன்னால் அரசியலை விட்டு போய்விடுகிறேன்.

அப்படியெல்லாம் அதிமுக கிடையாது. ஜெயக்குமாரையும் என்றும் அப்படி நினைக்காதீங்க உங்களைச் சுத்திச் சுத்தித்தான் நான் வந்தேன். இன்னும் பத்து எலக்ஷனில் நிற்பேன். அதுவும் ராயபுரத்தில்தான் நிற்பேன். நான் போய் பொதுச்செயலாளரிடம் கேட்டால் கும்மிடிப்பூண்டியில் நிற்கலாம். இல்லையென்றால் சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் போய் நிற்கலாம். மயிலாப்பூர்ன்னு கூட சொன்னாங்க. ஆனா எனக்கு இருக்கும் ஒரே சொந்த ஊர் ராயபுரம்தான். அங்குதான் நிற்பேன்” என்று உறுதியாகத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயக்குமார் தொகுதி மாறி போட்டியிட இருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அவர் ராயபுரம் தொகுதியில்தான் நிற்பேன் என தற்போது தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share