‘என்ன தகப்பா, இதெல்லாம்; அவரை மன்னியுங்கள்’- தந்தை குறித்து அஸ்வின்

Published On:

| By Minnambalam Login1

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பே பெறாத அஸ்வின் இரண்டாவது போட்டியில் விளையாடினார். மீண்டும் மூன்றாவது போட்டியில் விளையாட அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இந்த நிலையில் தனது ஓய்வு அறிவிப்பை நேற்று முன்தினம் திடீரென வெளியிட்டார். இது, அவர் அணியில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று சொந்த ஊரான சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்த அஸ்வினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்பு அளித்தனர்.

பின்னர், அஸ்வின் ஓய்வு குறித்து அவரது தந்தை அளித்த பேட்டியில் கூறியதாவது, எனது மகன் திடீரென்றுதான் ஓய்வு முடிவை அறிவித்துள்ளான். எங்களுக்கு முன்னரே இது தெரியாது. எவ்வளவு காலம்தான் அவமானத்தை சகித்து கொண்டிருக்க முடியுமென்று தெரிவித்திருந்தார்.

இந்த பேட்டியை பார்த்த அஸ்வின், தந்தை குறித்து எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். என்ன தகப்பா இதெல்லாம் என்று கேலியாக குறிப்பிட்டிருந்த அஸ்வின், ‘ தன் தந்தைக்கு மீடியாக்களிடத்தில் பேசி பழக்கம் இல்லை. அவரை மன்னியுங்கள். தனியாக விடுங்கள் ‘என்று தெரிவித்துள்ளார்.

அனைத்துவிதமான சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வின் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கடைசி டி20 போட்டியில் ஆடினார். கடைசி ஒருநாள் போட்டி 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் ஆடியிருந்தார். அஸ்வின் மொத்தம் 765 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில், டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 537 விக்கெட்டுகள் அடங்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

-எம்.குமரேசன்

நகை வாங்க நல்ல சான்ஸ்… மூன்றாவது நாளாக குறைந்த தங்கம் விலை!

ராகுல் எங்கே நின்றார் தெரியுமா?: வீடியோ வெளியிட்டு ஜோதிமணி விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share