விளையாட்டு வீராங்கனை பிரியா உயிரிழந்ததை தொடர்ந்து இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியாவிற்கு கடந்த அக்டோபர் மாதம் 20-ந்தேதி பயிற்சியில் ஈடுபட்டபோது வலது மூட்டில் வலி ஏற்பட்டது.
இதனால் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த 7ம் தேதி மூட்டு சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

பின்னர் பிரியாவின் வலது காலில் வீக்கம் ஏற்படவே மூட்டுக்கு மேல் பகுதி கால் அகற்றப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கடந்த நவம்பர் 8-ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியா இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சந்தித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் கூறினார்.
மருத்துவர்கள் பணியிடை நீக்கம்!
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவிற்கு மூத்த மருத்துவர்கள் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார்கள்.
வலது காலில் ரத்த ஓட்டம் தடைபட்டதால் ஈரல், சிறுநீரகம், இதயம் பாதிக்கப்பட்டது. இதனால் இன்று காலை 7.15 மணிக்கு பிரியா உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவ வல்லுநர் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டோம்.
பிரியாவின் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளதால் உடனடியாக தமிழக அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.
பெரியார் நகர் மருத்துவமனையில் பிரியாவிற்கு கவனக்குறைவான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பின் காலில் கட்டுப்போட்டதால் ரத்த ஓட்டம் தடைபட்டு தற்போது உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே பிரியாவிற்கு சிகிச்சை அளித்த பெரியார் நகர் மருத்துவர்கள் இரண்டு பேர் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
பிரியா இன்று உயிரிழந்ததை தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்ட இரண்டு மருத்துவர்களும் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்கள்.
காவல்துறையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர்கள் மீது புகார் அளித்து சட்டரீதியான நடவடிக்கை தொடரும்.
மேலும் மாணவி பிரியாவை முதலில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்த போது பெரியார் நகர் மருத்துவமனைக்கு அனுப்பியதாக கூறப்படும் நிலையில் அதுகுறித்தும் விசாரணை நடத்தப்படும்.” என்று தெரிவித்தார்.
செல்வம்
”கட்டாயம் மதமாற்றம் நாட்டுக்கு அச்சுறுத்தல்!” – உச்சநீதிமன்றம்