எலும்புகள்தான் ஆரோக்கியமான உடலின் அஸ்திவாரம். நாம் நிற்க, அமர, நடக்க, ஓட என துடிப்பான எந்தச் செயலைச் செய்யவும் எலும்புகள் உறுதியாக இருப்பது அவசியம். எலும்பு ஆரோக்கியமாக, வலிமையாக இருக்கவும், முறிந்த எலும்பு விரைவில் ஒன்று சேர உதவும் உணவுகள் எது தெரியுமா?
எலும்பு முறிவு ஏற்பட்டால் விரைவில் இணைய கால்சியம் அவசியம். கால்சியம் சத்தை கிரகிக்க வைட்டமின் டி தேவை. இந்த இரண்டும் போதுமான அளவில் கிடைத்துவிட்டால் பிரச்சினை இல்லை.
கால்சியம் நிறைந்த உணவுகளில் முக்கியப் பங்கு வகிப்பவை பால் மற்றும் பால் பொருட்கள். கால் எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள், மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை வீட்டில் ஓய்வெடுக்க வேண்டியிருக்கும். இந்தக் காலத்தில், உடல் உழைப்பு இல்லாத காரணத்தால் அதீத உடல் பருமனுக்கு ஆளாக நேரிடலாம். இவர்கள், கொழுப்பு நீக்கப்பட்ட ஸ்கிம்டு மில்க், டோன்டு மில்க் சாப்பிடலாம். லாக்டோஸ் இண்டாலரன்ஸ் எனும் பால் ஒவ்வாமை உடையவர்கள், தினசரி சோயா, கீரை, பீன்ஸ், பழச்சாறு சாப்பிட்டாலே தேவையான அளவு கால்சியம் கிடைத்துவிடும்.
ஆஸ்டியோபொரோசிஸ் என்னும் எலும்பு அடர்த்திக் குறைதல் பிரச்சினை உடைய பெண்களுக்கு, மெனோபாஸ் நேரத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டால், மருத்துவரின், ஆலோசனைப்படி பால் எடுத்துக் கொள்வது நல்லது. எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள், தினமும் காலையில் சோயாப் பால் அருந்துவது நல்லது. இதில், கொழுப்பு மிக மிகக் குறைவு என்பதால் உடல் பருமனானவர்களும் சாப்பிடலாம்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட நெத்திலி, வஞ்சிரம், கட்லா உள்ளிட்ட மீன்களைச் சாப்பிடுவதன் மூலமாக எலும்பு அடர்த்தி அதிகரிக்கிறது. ஆட்டுக்கால் சூப் குடிக்கலாம். ஆட்டுக்கால் எலும்பு மஜ்ஜையில் கால்சியம் பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து உள்ளிட்ட தாது உப்புக்கள் நிறைந்துள்ளன. இதைச் சாப்பிடுவதால் எலும்பு விரைவில் கூடும். எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள், மூன்று நாளுக்கு ஒரு முறை நண்டு சூப் குடிக்கலாம். அதிக உஷ்ணம் உள்ளதால் இதை வெயில் காலங்களில் தவிர்ப்பது நல்லது.
கொள்ளில், சோயாவுக்கு இணையாக கால்சியம் நிறைந்தது. எலும்பு உறுதிக்குக் கொள்ளு மிகவும் அவசியம். 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், சைவம் சாப்பிடுபவர்கள் கொள்ளு ரசம் வைத்துக் குடித்து வந்தால் எலும்பு வலுவாகும். புரொக்கோலி, முட்டைகோஸ், காலிஃபிளவர், பீட்ரூட் போன்ற காய்கறிகளைத் தினசரி சேர்த்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் வலுப்பெறும். வைட்டமின் சி நிறைந்த பழங்களைச் சாப்பிடலாம்.
ஆரஞ்சு, கொய்யா, ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம், ஆப்பிள் போன்றவை எலும்புகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும். அத்திப்பழத்தில் கால்சியம் நிறைந்துள்ளது. இது தவிர கேரட், வெண்டைக்காய், வெங்காயம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆகியவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கீரைகளில் வெந்தயக்கீரை, வெங்காயத்தாள், முருங்கை, கொத்தமல்லி, முள்ளங்கிக்கீரை, பாலக்கீரை ஆகியவற்றில் கால்சியம் உள்ளது. கவனிக்க… கீரைகளை அசைவத்தோடு சேர்த்துச் சாப்பிடக் கூடாது. இரவில் சாப்பிடக் கூடாது. இதனால், செரிமானம் தாமதப்படும். காலை, மதிய உணவில் கீரை சாப்பிடலாம். அவ்வப்போது முந்திரி, பாதாம், பிஸ்தா, பேரீச்சம் பழம், ராகி கஞ்சி, எண்ணெய் அதிகம் சேர்க்கப்படாத ராகி தோசை சாப்பிடலாம்.
சூரிய ஒளியில் வைட்டமின் டி அதிகமாக உள்ளது. எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் தினமும் காலை 7:00 – 8:00 மணி வெயிலில் நிற்கலாம். இதனால், வைட்டமின் டி உற்பத்தியாகி எலும்புகளின் உறுதி அதிகரிக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலை கைது? களத்தில் குதிக்கும் அமித் ஷா… பரபரப்புத் திருப்பங்கள்!
புத்தரை வழங்கிய இந்தியா, யுத்தத்தை ஏற்காது…