சென்னை மண்டல உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். Food Safety Officer Satish transferred
சென்னையில் உள்ள ஹோட்டல்களில் உணவு பாதுகாப்பு தொடர்பாக அதிகாரி சதீஷ் தொடர் சோதனையில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி, திருவல்லிக்கேணி ஹை ரோட்டில் உள்ள “ஹோட்டல் பிலால்” உணவகத்தில் ஆய்வு செய்த அதிகாரி சதீஷ், அந்த ஹோட்டலுக்கு சீல் வைத்தார்.
தொடர்ந்து, மவுண்ட் ரோடு பிலால் ஹோட்டலில் சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அந்த ஹோட்டலுக்கு ஆய்வுக்கு சென்ற அதிகாரி சதீஷ், உள்ளே சென்று ஆய்வு செய்யவில்லை.
ஹோட்டலுக்கு வெளியே நின்றிருந்த இரண்டு ஊழியர்களிடம் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.
அந்த சமயத்தில் அவருக்கு படபடப்பு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்று ஈசிஜி எடுத்து பார்த்ததாகவும் தகவல்கள் வந்தன.
அதிகாரி சதீஷ் ஆய்வு செய்யாமல் திரும்பி சென்ற வீடியோ ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வைரலானது.
இந்த நிலையில் மேலிட அழுத்தம் காரணமாகத்தான் அவர் ஆய்வு செய்யாமல் சென்றதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் விளக்கம் அளித்திருந்தார்.
அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில், “சைதாப்பேட்டையில் தர்பூசணி தொடர்பான குழப்பங்களை மக்களிடையே தீர்க்கும் வகையில் செய்தியாளர்களுக்கு நீண்ட நேரம் பேட்டியளித்துவிட்டு ஆய்வுக்காக சென்றபோது நந்தனம் அருகே எனக்கு படபடப்பு ஏற்பட்டது.
இதனால் எனது மனைவிக்கு போன் செய்துவிட்டு மருத்துவமனைக்கு சென்றேன்.
ஆனால் ஹோட்டலுக்கு வந்து ஆய்வு செய்யாமல் தப்பித்து ஓடுவது போல சித்தரித்து செய்திகளை பரப்புகிறார்கள். நான் என் கடமையிலிருந்து தவறவில்லை. இதுபோன்று செய்திகளை பரப்புவதை தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே தர்பூசணி பழம் விவகாரத்திலும் உணவு பாதுகாப்புத்துறை சர்ச்சையில் சிக்கியது.
தர்பூசணியில் சிவப்பு நிறமூட்டி செலுத்தி விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வரும் நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர், இது தொடர்பாக சோதனை செய்து காட்டினார்.
இதுதொடர்பான வீடியோவில், ஒரு தர்பூசணி பழத்தை இரண்டாக வெட்டி, அதில் டிஷ்யூ பேப்பரை வைத்து துடைக்கிறார். அதில், சிவப்பு நிறமாக ஒட்டி இருந்தால் அது நிறமூட்டி செலுத்தப்பட்டது என்று அந்த அதிகாரி விளக்குகிறார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், தர்மபுரியில் விவசாய நிலத்துக்கே சென்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இது தர்பூசணி விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்னொரு பக்கம் சென்னை கோயம்பேட்டில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு எதிராக பழ வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாகவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் விளக்கமளித்திருந்தார்.
இதுபோன்று தொடர்ந்து அவர் சர்ச்சையில் சிக்கிய நிலையில் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் தமிழ்நாடு மருந்து நிர்வாகத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி போஸ் கூடுதலாக சென்னை மாவட்ட பொறுப்புகளை கவனிப்பார் என்றும் சுகாதாரத் துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. Food Safety Officer Satish transferred