அனைத்து உணவு வணிகர்களுக்கு 14 புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உணவு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது. Food Safety Department warns shops
சமீப நாட்களாக உணவகங்களில் சாப்பிடுவோருக்கு உடல்நலக் குறைவு ஏற்படுவது என்பது தொடர்கதையாகி வருகிறது. உணவு பாதுகாப்புத் துறையும் அவ்வபோது உணவகங்கள் பேக்கிரிகளில் சோதனை செய்து வருகிறது.
உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ராகவன் தலைமையில் நேற்று ஊட்டியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்படாத தின்பண்டங்கள், காலாவதியான ஜூஸ் பாட்டில்கள், பழைய இறைச்சி உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்து, அதனை பெனாயில் ஊற்றி அழித்தனர். தொடர்ந்து, அந்தந்த கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி சென்றனர்.
இதுபோன்ற சூழலில் இன்று (ஜூன் 4) உணவு பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிவிப்பில், “அனைத்து உணவு வணிகர்களும் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
அனைத்து உணவு வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு டைபாய்டு மற்றும் மஞ்சள் காமலை உள்ளிட்ட நோய்களுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தி, மருத்துவத் தகுதி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
உணவு வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரை பகுப்பாய்வு செய்து, பகுப்பாய்வறிக்கை வைத்திருக்க வேண்டும்.
உணவுப் பொருட்களை ஈக்கள்/பூச்சிகள் மொய்க்காத வண்ணம் கண்ணாடி பெட்டியில் மூடி வைத்து, காட்சிபடுத்த வேண்டும்.
உணவு எண்ணெயை ஒருமுறை மட்டுமே சமைக்கப் பயன்படுத்த வேண்டும். மீதமான பயன்படுத்திய உணவு எண்ணெயை, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. (FSSAI) அங்கீகரித்த கொள்முதலாளருக்கும் மட்டும் விற்க வேண்டும்.
விற்பனையாகாமல் மீதமான உணவை நுகர்வோருக்கு வழங்காமல் அப்புறப்படுத்திட வேண்டும்.
நியூஸ் பேப்பர் போன்ற அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருளில் நேரடியாகப்படும் வகையில் பரிமாறவோ/பொட்டலமிடவோ கூடாது.
அனுமதிக்கப்படாத நெகிழியில் (பிளாஸ்டிக்) உணவுப் பொருட்களை சூடாகவோ அல்லது இயல்பு நிலையிலோ பொட்டலமிடக்கூடாது.
உணவகங்களில் உணவு பரிமாற வாழை இலை அல்லது அனுமதிக்கப்பட்ட பார்ச்மெண்ட் பேப்பர்/அலுமினியம் பாயில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்படாத நெகிழியினை (ப்ளாஸ்டிக்) பயன்படுத்தக்கூடாது.
எவ்வகை உணவு எண்ணெய்களையும் லேபிள் விபரங்களின்றியும் பொட்டலமிடாமல் சில்லறை அடிப்படையில் (loose sale) நுகர்வோருக்கு விற்பனை செய்தல் கூடாது.
உணவைக் கையாளுபவர்கள் கையுறை மற்றும் தலைமுடி கவசம் போன்றவற்றைத் தவறாமல் அணிய வேண்டும்.
பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களை கொள்முதல் விற்பனை செய்யும் போது, FSSAI உரிம எண்ணுடன் கூடிய முழுமையான லேபிள் விபரங்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
உணவு சமைக்க மற்றும் நொறுக்குத் தீனிகள் தயாரிக்க அயோடின் கலந்த உப்பு மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவகங்கள்/பேக்கரி/இனிப்பகங்கள் உள்ளிட்ட உணவு நிறுவனங்களில் அயோடின் கலக்காத உப்பு இருக்கக்கூடாது.
சிக்கன்-65, பஜ்ஜி, கோபி-65 போன்ற உணவுப் பொருட்களில் செயற்கை நிறமிகள் சேர்க்கக்கூடாது.
உணவு வணிகர்கள் அனைவரும் இவ்வறிவிப்பைக் கண்ட 14 தினங்களுக்குள் மேற்கூறியவற்றை தவறாது பின்பற்றிட வேண்டுமென அறிவிக்கப்படுகின்றது. தவறும்பட்சத்தில், எவ்வித முன்னறிவிப்பின்றி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. Food Safety Department warns shops