அஜித் பவாரை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் பிரதமர் மோடியின் அமைச்சரவை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளது.
நாட்டின் 18வது மக்களவைத் தேர்தலை தொடர்ந்து நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக 3வது முறையாக நேற்று (ஜூன்9) டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து 71 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இதில் பாஜக சார்பில் 61 பேரும், கூட்டணி கட்சி சார்பில் 11 பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.
தெலுங்கு தேசம் கட்சிக்கு அதிக பதவி ஒதுக்கீடு!
கூட்டணி கட்சிகளை பொறுத்தவரை லோக் ஜன சக்தி கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி, ஹிந்துஸ்தான் ஆவாம் மோர்ச்சா கட்சி, ஐக்கிய ஜனதா தள கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய ஜனதா தள கட்சி, அப்னா தள கட்சி தலா ஒரு இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இணையமைச்சர் தனி பொறுப்பு பதவியானது சிவசேனா (ஏக்நாத் சிண்டே) கட்சி, ராஷ்டிரிய லோக் தளம் கட்சி கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக மக்களவை தேர்தலில் 16 இடங்களை வென்ற தெலுங்கு தேசம் கட்சி ஒரு அமைச்சர் மற்றும் 2 இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அஜித் பவார் மறுப்பு!
முன்னதாக மஹாராஷ்டிராவை சேர்ந்த அஜித் பவாரின் என்சிபி கட்சியை சேர்ந்த பிரபுல் பட்டேலுக்கு சுயேட்சை பொறுப்புடன் இணையமைச்சர் பதவி வழங்க இருந்தது. அவர் ஏற்கெனவே கேபினேட் அமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் நேற்று பதவியேற்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தாங்கள் அமைச்சர் பதவியை தான் எதிர்பார்க்கிறோம் என்று கூறி இணையமைச்சர் பதவியை நிராகரித்தது. இது தேசிய ஜனநாயக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஏக்நாத் ஷிண்டே கட்சி அதிருப்தி!
இந்த நிலையில் அதே மஹாராஷ்டிராவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியும் மோடியின் புதிய அமைச்சரவையில் சுயேச்சைப் பொறுப்பில் ஒரு இணை அமைச்சரைப் பெற்றதற்கு இன்று அதிருப்தியை தெரிவித்துள்ளது.
நேற்று அக்கட்சியை சேர்ந்த பிரதாப் ராவ் யாதவ் பாஜக கூட்டணி அமைச்சரவையில் சுயேச்சை பொறுப்புடன் இணையமைச்சராக பதவி ஏற்றார்.
அமைச்சர் பதவியை தான் எதிர்பார்த்தோம்!
இதுதொடர்பாக அக்கட்சியின் தலைமைக் கொறடா ஸ்ரீரங் பார்னே கூறுகையில், “என்.டி.ஏ கூட்டணியில் நாங்கள் அமைச்சர் பதவியை தான் எதிர்பார்த்தோம். 5 எம்.பிக்கள் கொண்ட லோக் ஜன சக்தி கட்சி, 2 எம்.பி.க்கள் கொண்ட மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி மற்றும் , 1 எம்.பி மட்டுமே கொண்ட ஹிந்துஸ்தான் ஆவாம் மோர்ச்சா கட்சி தலா ஒரு கேபினட் அமைச்சரை பெற்றது.
ஆனால், 7 மக்களவைத் தொகுதிகளை கைப்பற்றிய எங்களது கட்சிக்கு (சிவசேனா) மட்டும் ஒரே ஒரு சுயேட்சை பொறுப்புள்ள இனையமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது ஏன்? பாஜகவின் பழைய கூட்டாளி என்பதால் சிவசேனாவுக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மஹராஷ்டிராவில் மொத்தம் 48 மக்களவை தொகுதிகள் உள்ள நிலையில், ஏக்நாத் சிண்டேவின் சிவசேனா போட்டியிட்ட 15 இடங்களில் 7 இடங்களை வென்றது. அஜித் பவாரின் NCP போட்டியிட்ட 4 இடங்களில் ஒன்றை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மத்திய அமைச்சரவையில் பணக்கார அமைச்சர் யார் தெரியுமா?
செந்தில் பாலாஜி மனுக்கள் மீது ஜூன் 14ஆம் தேதி தீர்ப்பு!
Comments are closed.