”வாஜ்பாயின் வழியைப் பின்பற்றுங்கள் : பிரதமர் மோடிக்கு ரேவந்த் ரெட்டி அறிவுறுத்தல்!

Published On:

| By christopher

follow vajpayee on delimitation : revanth reddy to modi

”தொகுதி மறுவரையறை செய்யும் போது முன்னாள் பாஜக பிரதமர் வாஜ்பாயின் வழியைப் பின்பற்றுங்கள்” என பிரதமர் மோடிக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவுறுத்தியுள்ளார். follow vajpayee on delimitation : revanth reddy to modi

சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 7 மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு கட்சியின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் அடங்கிய தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம் இன்று (மார்ச் 22) நடைபெற்றது.

பாஜகவை நாம் தடுக்க வேண்டும்!

இதில் பங்கேற்ற தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது, “நாட்டில் நாம் இப்போது மிகவும் நெருக்கடியான கட்டத்தில் இருக்கிறோம். பாஜக அரசு நம்மை ஜனநாயகமற்ற முறையில் தண்டிக்கிறது. இந்திய அரசு 1971ஆம் ஆண்டு நாடு முழுவதும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை கொண்டு வந்தபோது, தேசத்திற்காக அதை தென்னிந்தியா மிகச் சிறப்பாகச் செயல்படுத்தின. ஆனால் வட இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்கள் தோல்வியடைந்தன.

மக்கள் தொகை வளர்ச்சியை குறைத்ததால், நாங்கள் வேகமான பொருளாதார வளர்ச்சி, பெரிய மொத்த உள்நாட்டு உற்பத்தி, அதிக தனிநபர் வருமானம், வேலைவாய்ப்பு உருவாக்கம், சிறந்த உள்கட்டமைப்பு மேம்பாடு, சிறந்த நிர்வாகம் மற்றும் சிறந்த சமூக நலனை அடைந்தோம். நாங்கள் தேசிய கருவூலத்திற்கு அதிக பங்களிப்பு செய்கிறோம், ஆனால் குறைவாகவே பெறுகிறோம்.

வரியாக ஒரு ரூபாய் கொடுப்பதற்கு, தமிழ்நாடு 26 பைசா பெறுகிறது. அதே போன்று கர்நாடகா 16 பைசா, தெலங்கானா 42 பைசா, கேரளா 49 பைசா மட்டுமே பெறுகின்றன. ஆனால் பீகார் ஒரு ரூபாய் கொடுத்து, ரூ.6.6, உத்தரபிரதேசம் ரூ.2.3, மத்திய பிரதேசம் ரூ.1.73 பெறுகிறது.

இந்தியா ஒரே நாடு ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் இந்த முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறையை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.ஏனெனில் அது அரசியல் ரீதியாக நம்மை மட்டுப்படுத்தும். இது பொருளாதார அளவில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களாக இருப்பதை தடுக்கும். நியாயமற்ற தொகுதி மறுவரையறையை செயல்படுத்துவதில் இருந்து பாஜகவை நாம் தடுக்க வேண்டும். இதில் எனக்கு மூன்று கருத்துகளை நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காதீர்கள்!

முதலாவது, நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காதீர்கள். ஆனால் மாநிலங்களுக்குள் தொகுதிகளின் எல்லையை மறுவரையறை செய்யுங்கள். 1976 ஆம் ஆண்டில், பிரதமர் இந்திரா காந்தி நாட்டின் எந்த தொகுதியையும் அதிகரிக்காமல் எல்லை நிர்ணயம் செய்தார். அது மாநிலங்களுக்குள் இருக்கும். அரசியல் அதிகார ஏற்றத்தாழ்வை தடுக்கும்.

2001 ஆம் ஆண்டில், அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கமும் எண்ணிக்கையை அதிகரிக்காமல் மாநிலங்களில் தொகுதி மறுவரையறை செய்தது. பிரதமர் நரேந்திர மோடியும் அதையே செய்ய வேண்டும். மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காதீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் செய்யாதீர்கள்!

இரண்டாவது, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால், அதை இங்குள்ள யாரும் ஏற்க கூடாது. பாஜக மக்கள்தொகை அடிப்படையில் எல்லை நிர்ணயம் செய்தால், தென்னிந்தியா தனது அரசியல் குரலை இழக்கும். வடக்கு எங்களை இரண்டாம் நிலை குடிமக்களாக மாற்றும். அதை இங்குள்ள அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.

உத்தரபிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை நாட்டின் பிற பகுதிகளில் ஆதிக்கம் செலுத்த வைக்கும் பாஜகவின் நடவடிக்கையை, தென்னிந்தியாவும், பஞ்சாபிலும் உள்ள அனைவரும் எதிர்க்க வேண்டும். இதை நாம் எந்த விலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

விகிதாசார உயர்வும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல!

மூன்றாவது, விகிதாசார சூத்திரம் எனக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. அது எங்களுக்கு தீங்கு விளைவிக்கும். விகிதாசாரத்தின் பிரச்சனை என்னவென்றால், அது அதிகார இடைவெளியை மாற்றுகிறது. எந்தவொரு அரசாங்கமும் ஒரு தொகுதி அல்லது ஒரு வாக்கு பெரும்பான்மையால் தீர்மானிக்கப்படுகிறது. ஒரு வாக்கு காரணமாக அரசாங்கம் வீழ்ந்த வரலாறு எங்களிடம் உள்ளது.

மாநிலங்களுக்குள் மறுவரையறை செய்யுங்கள்!

சரி என்ன செய்ய வேண்டும்? நரேந்திர மோடி வாஜ்பாயின் முறையைப் பின்பற்றலாம். இன்னும் 25 ஆண்டுகளுக்கு மக்களவை இடங்களை அதிகரிக்காதீர்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தொகுதிகளின் எல்லையை மறுவரையறை செய்யுங்கள். சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை வழங்கவும், எஸ்சி, எஸ்டி இடங்களை அதிகரிக்கவும் மாநிலத்திற்குள் உள்ள மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்யுங்கள்.

இறுதியாக நான் சொல்வது என்னவென்றால், தென்னிந்தியா மற்றும் பஞ்சாபிற்கு எதிரான எல்லை நிர்ணயக் கொள்கையை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நேரம் இது. கடந்த 50 ஆண்டுகளாக தேசத்தைக் கட்டியெழுப்புவதில் நாம் ஆற்றிய பங்களிப்பிற்கு மத்திய அரசு நமக்கு திருப்பிக் கொடுத்து வெகுமதி அளிக்க வேண்டிய நேரம் இது.

33 சதவீதமாக உயர்த்துங்கள்!

இதையும் தாண்டி தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என பாஜக அடம்பிடித்தால் எனக்கு அதில் ஒரு கண்டிஷன் உள்ளாது. தற்போது மொத்தம் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் தென் மாநிலங்களுக்கு 130 இடங்கள் உள்ளன. அதாவது 24 சதவீதம். நீங்கள் தொகுதி மறுவரையறை செய்தே ஆக வேண்டும் என விரும்பினால், அதை 33 சதவீதமாக உயர்த்துங்கள்.

தென் மாநிலங்கள் நம்மிடையே இருக்கும் பிரச்சனைகள், வேறுபாடுகளை மறந்து இந்த விசயத்தில் ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும்.

ஹைதராபாத்தில் அடுத்த மீட்டிங்!

தெலங்கானா சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக விரைவில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படும். தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்கள் மற்றும் பஞ்சாபும் அவ்வாறே செய்ய வேண்டும். அடுத்த நியாயமான தொகுதி வரையறை கூட்டத்தை ஹைதராபாத்தில் வைத்து நடத்த இங்கே உங்கள் அனைவரிடமும் கோரிக்கை வைக்கிறேன்” என்று ரேவந்த் ரெட்டி பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share