விசைத்தறியில் கைத்தறி ரகங்களைத் தடுக்க பறக்கும் படை!

Published On:

| By Selvam

கைத்தறி ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வதை தடுக்க பறக்கும் படை குழுவின் மூலம் விசைத்தறி கூடங்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் கூறியுள்ளார்.

“கைத்தறி உற்பத்திக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வதை தடுக்க அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்துக்கு புறம்பாக உற்பத்தி செய்வது கண்டறியப்பட்டால் கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சமீபத்தில் எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில் கைத்தறிக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்ட ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வதை தடுக்கும் வகையில் மாவட்ட கலெக்டரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“கைத்தறி ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985 சட்டப்பிரிவு (5)-ன்படி சட்டத்தை மீறிய செயலாகும்.

இது கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் பிரிவு 10 (ஏ)-ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

விசைத்தறி நெசவாளர்களுக்கு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் -1985 குறித்து தற்போது வரை ஆரணி சைதாப்பேட்டை, முள்ளிப்பட்டு, இரும்பேடு, கங்கா நகர், சக்தி நகர், ஆரணி நகரம், கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் ஆங்குணம் கிராமம் மற்றும் செய்யாறு திருவத்திபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட 11 ரகங்கள் குறித்தும்,

அதனை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் மேற்கொள்ளப்படும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் 29 விசைத்தறி கூடங்களில் 226 விசைத்தறிகளின் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 2 விசைத்தறியாளர்கள் மீது காவல்துறை மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விசைத்தறிக் கூடங்களில் திடீர் ஆய்வின்போது கைப்பற்றப்பட்ட 9 சேலை மாதிரிகள் தரப்பரிசோதனை ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையில் விதிமீறல்கள் இருப்பின் சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திடீர் ஆய்வுகள் மேலும் கைத்தறி ஆணையரால் நியமனம் செய்யப்பட்டுள்ள பறக்கும் படை குழுவின் மூலம் விசைத்தறி கூடங்கள் மீது திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

விசைத்தறியாளர்களுக்கு இடையே விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ராஜ்

கிச்சன் கீர்த்தனா: கேழ்வரகு கார அடை

ராகுல் காந்திக்கு ஏன் இன்னும் பதவி கொடுக்கவில்லை? : மு.க.ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share