ஆந்திரா, தெலுங்கானா மழை வெள்ள பாதிப்பினை தொடர்ந்து முதல்வரின் நிவாரண நிதிக்கு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் நன்கொடையை வாரி வழங்கி வருகின்றனர்.
தெலுங்கானா மற்றும் ஆந்திரா இரு மாநிலங்களின் பல பகுதிகளிலும் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டதால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குடும்பத்துடன் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை தெலுங்கானாவில் 16 பேரும், ஆந்திராவில் 19 பேரும் என மொத்த பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. 4.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் அந்தந்த மாநிலங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை தொடர்ந்து பார்வையிட்டு, மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
மேலும் இரு மாநில முதல்வர்களும் வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி உள்ளனர்.
இதற்கிடையே வெள்ளப்பாதிப்பின் எதிரொலியாக தெலுங்கு திரையுலக உச்ச நட்சத்திரங்கள் பலரும் இரு மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு தங்களது நன்கொடையை அளித்து வருகின்றனர்.
அதன்படி ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண், ஆந்திரா மற்றும் தெலுங்கான முதல்வரின் நிவாரண நிதிக்கு தலா ரூ.1 கோடி வழங்குவதாக நேற்று அறிவித்தார்.
தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 400 பஞ்சாயத்துகளுக்கு தலா ரூ. 1லட்சம் என்ற அளவில் ரூ.4 கோடி வழங்குவதாகவும் அறிவித்துள்ளார். இதன் மூலம் பவன் கல்யான் ரூ. 6 கோடி நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.
மூத்த நடிகர் சிரஞ்சீவி, ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம் என ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.
நடிகரும், ஆளும் தெலுங்கு தேச கட்சியின் எம்.எல்.ஏவுமான பால கிருஷ்ணா என்ற பாலையா இரு மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம் என ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.
நடிகர் பிரபாஸ் இரு மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு தலா ரூ. 1 கோடி என 2 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.
இதே போன்று, பிரபல நடிகர்களான மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் இரு மாநிலங்களின் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்துள்ளனர்.
நடிகர்களான நாகர்ஜூனா, நாக சைதன்யா மற்றும் அகில் ஆகியோர் அடங்கிய அக்கினேனி குடும்பத்தினர் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு தலா ரூ.50 லட்சம் நன்கொடையை அறிவித்தனர்.
நடிகர் விஷ்வக் சென் ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தலா 5 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வானிலை நிலவரம் : லேசான மழையா? அல்லது பலத்த மழையா?
12 மீனவர்களுக்கு தலா ரூ.3.50 கோடி அபராதம் : அன்புமணி வேண்டுகோள்!