சிஎஸ்கே அணியின் தொடர்ச்சியான 4வது தோல்வியால், இந்த சீசன் ஏமாற்றமளிப்பதாக பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். fleming worried on csk worst record in ipl 2025
சண்டீகரில் நேற்று (ஏப்ரல் 8) பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன்மூலம் நடப்புத் தொடரில் தொடர்ச்சியாக நான்காவது தோல்வியை சந்தித்துள்ளது சிஎஸ்கே. புள்ளிப்பட்டியலிலும் -0.889 ரன் ரேட்டுடன் 9வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
பஞ்சாப் அணி வீரர்கள் கொடுத்த பல கேட்சைகளை தவறவிட்டதே சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடும் விமர்சனம் முன்வைத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக போட்டிக்கு பின்னர் கேப்டன் ருத்துராஜ் அளித்த பேட்டியில் கூட, தனது அணி வீரர்களின் பீல்டிங்கை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கிடையே நடப்பு தொடரில் சிஎஸ்கே அணியின் மோசமான பீல்டிங் குறித்து கிரிக்புஷ் இணையதளம் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டது. அதில் அதிக கேட்சை (11) கோட்டை விட்ட அணிகளில் சென்னை அணி முதலிடத்தில் உள்ளதாகவும், மோசமான பீல்டிங்கில் 3வது இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கும், அணியின் பீல்டிங் குறித்து வருத்தம் தெரிவித்தார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர் இன்று பேசுகையில், “தொடர்ச்சியான தோல்வி விரக்தியளிக்கிறது. இந்த சீசன் ஏமாற்றமளிக்கிறது. வீரர்கள் கேட்ச்சை கோட்டை விட்டது மோசமாக இருந்தது. அவர்கள் இருபது ரன்கள் அதிகம் எடுத்ததற்கு அதுதான் காரணம்” எனக் கூறினார்.
மேலும் அவர், “நேற்றைய போட்டியில் நாங்கள் கொஞ்சம் சிறப்பாக பேட்டிங் செய்தோம். டாப் ஆர்டர் நல்ல பேட்டிங் செய்தனர். ஆனால் அது வெற்றிக்கு போதுமானதாக இல்லை. மிடில் ஓவர்களில் ரன்ரேட் மெதுவானதால், இறுதியில் வெற்றிக்கு அதிக ரன்கள் தேவைப்பட்டது” என பிளெமிங் தெரிவித்தார்.
