மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடியை பதில் அளிக்க வைக்கும் விதமாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று (ஜூலை 26) கொண்டு வர உள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடந்து வரும் மணிப்பூர் கலவரத்திற்கிடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கியது.
அப்போது முதல் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 4 நாட்களாக இரு அவைகளும் முடங்கியுள்ளன.
இந்த நிலையில், 4வது நாளான நேற்று மக்களவை ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறையில் ‘INDIA’ கூட்டணி உறுப்பினர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு எதிராக நாளை (இன்று) நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், ‘‘மணிப்பூர் சம்பவம் குறித்து பதில் அளிக்க பிரதமர் மோடி மறுத்து வருகிறார். எனவே, எங்களது கேள்விகளுக்கு பிரதமர் பதில் கூற, நம்பிக்கையில்லா தீர்மானத்தை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை. இன்று காலை 10 மணிக்கு முன்னதாக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் மக்களவைச் செயலர் அலுவலகத்தில் அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
திமுக மாவட்ட செயலாளர் அதிரடி நீக்கம்!
அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி!