தெலங்கானா மாநிலத்தின் 119 தொகுதிகளிலும் தற்போது வாக்கு எண்ணிக்கை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. 2014-ம் ஆண்டு தனி மாநிலமாக தெலங்கானா உருவானதில் இருந்து தொடர்ந்து 2 முறை முதல்வராக இருந்த சந்திரசேகர் ராவ் தற்போது அங்கு எதிர்க்கட்சி தலைவராக மாறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
தற்போது மதியம் 2 மணி நிலவரப்படி அங்கு மொத்தமுள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் 63 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சி 41 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதேபோல பாஜக கட்சி 8 இடங்களிலும், ஓவைசி தலைமையிலான கட்சி 6 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. ஒரு தொகுதியில் சிபிஎம் முன்னிலை வகிக்கிறது.
முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் காமாரெட்டி, கெஜ்வால் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் காமாரெட்டி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரேவந்த் ரெட்டியை விட 3,335 வாக்குகள் பின்தங்கி 33,338 வாக்குகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
பாஜக வேட்பாளர் வேங்கட ரமண ரெட்டி 33,239 வாக்குகளுடன் 3-வது இடத்தில் நீடிக்கிறார். வேங்கட ரமண ரெட்டிக்கும், சந்திரசேகர் ராவுக்கும் வெறும் 99 வாக்குகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. இதனால் கேசிஆர் 3-வது இடத்துக்கு தள்ளப்படும் சூழல் உருவாகி உள்ளது.
அதே நேரம் கெஜ்வால் தொகுதியை பொறுத்தவரை முதல் இடத்தில் 36,697 வாக்குகளுடன் சந்திரசேகர் ராவ் முதலிடத்தில் நீடிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் எட்டலா ராஜேந்தர் 24,983 வாக்குகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறார். இருவருக்கும் இடையில் 11.714 வாக்குகள் வித்தியாசம் இருப்பதால் கெஜ்வால் சந்திரசேகர் வசமாகும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
மகளிர் பிரதேசமான மத்திய பிரதேசம்
மூன்று மாநிலத்தில் வெற்றி உறுதி… ராகுல், உதயநிதியை தாக்கும் பாஜகவினர்!