மோகன ரூபன்
இந்தியாவின் இதயம் மத்தியப் பிரதேசம்
இந்தியாவில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்கள் இப்போது சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டுள்ளன. இந்த ஐந்து மாநிலங்களில் ‘இந்தியாவின் இதயம்’ என்று அழைக்கப்படுவது மத்திய பிரதேசம்.
பெயருக்கேற்ற மாதிரி இந்தியாவின் நடுப்பகுதியில் அமைந்த மாநிலம் இது. ஒருகாலத்தில் பரப்பளவில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் மத்திய பிரதேசம்தான்.
2000ஆம் ஆண்டில் சத்தீஷ்கர் மாநிலம் பிரிந்தபோது இந்த பெருமையை மத்திய பிரதேசம் இழந்துவிட்டது.
இப்போது ராஜஸ்தானுக்கு அடுத்தபடி இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலம் இது. மக்கள் தொகையில் இந்தியாவின் ஐந்தாவது பெரிய மாநிலம்.
மத்தியப் பிரதேசம் உருவான கதை!
ஒருகாலத்தில் மத்திய பாரத், விந்திய பிரதேஷ், போபால், குவாலியர், நாக்பூர், விதர்பா பகுதிகளை கலந்துகட்டிய ஒரு பகுதியாக மத்திய பிரதேசம் இருந்திருக்கிறது. அப்போது நாக்பூர்தான் தலைநகரம்.
1956ல் மத்திய பிரதேச மாநிலம் உருவானபோது, மராத்தி பேசும் நாக்பூர், விதர்பா பகுதிகள் நீக்கப்பட்டு இப்போதுள்ள மத்திய பிரதேசம் உருவானது. போபால் தலைநகரமானது. மத்திய பிரதேசத்துக்கு மத்திய பிரதேசம் என்று பெயர் சூட்டியவர் நேரு.
மண்ணின் மைந்தர்கள் என்று பார்த்தால் மத்திய பிரதேசத்தில் நிறைய ஆளுமைகள் இருக்கிறார்கள். விடுதலைப் போராட்ட வீரர் சந்திரசேகர் ஆசாத், முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய், பிரபல பின்னணிப் பாடகி, பாடகரான லதா மங்கேஷ்கர், கிஷோர் குமார், கைலாஷ் சத்யார்த்தி, நடிகை ஜெயா பச்சன், கிரிக்கெட் வீரர்கள் மன்சூர் அலிகான் பட்டோடி, நரேந்திர ஹிர்வானி எல்லோரும் மத்திய பிரதேசத்துக்காரர்கள்தான்.
ம.பி.யின் சிறப்புகள்!
கல்லிலே கலை வண்ணம் காணும் கஜிராகோ, சாஞ்சி ஸ்தூபி எல்லாம் மத்திய பிரதேசத்தில்தான் இருக்கிறது.
இந்தியாவில் கும்பமேளா நடக்கும் 4 இடங்களில் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியும் ஒன்று. போபால் தவிர குவாலியர், இந்தூர், ஜபல்பூர் போன்ற நகரங்களைக் கொண்ட மாநிலம் மத்திய பிரதேசம்.
உலக அளவில் புலிகள் அதிக அளவில் செறிந்து வாழும் பகுதியும் மத்திய பிரதேசம்தான். இந்தியாவின் புலி மாநிலமாகக் கருதப்படும் மத்திய பிரதேசத்தில், பாண்டவ்கார், பன்னா, கன்கா, பென்ச் மாதிரியான தேசியப்பூங்காக்கள் இருக்கின்றன.
எழுத்தாளர் ருட்யார்ட் கிப்ளிங் எழுதிய ‘தி ஜங்கிள் புக்’ கதைக்கு தூண்டுதலாக இருந்தது மத்திய பிரதேசத்தில் உள்ள செனாய் காடுதான்.
இந்தியாவில் பழங்குடி மக்கள் அதிகம் வாழும் மாநிலம் மத்திய பிரதேசம். கோண்ட், பில், பாகியா, மால்ட்டா, கௌல், டார் உள்பட பல்வேறு பழங்குடி மக்கள் மத்திய பிரதேசத்தில் வாழ்கிறார்கள். 2011ல் எடுத்த கணக்கின்படி, மாநிலத்தின் பழங்குடி மக்களின் அளவு 21.1 சதவிகிதம்.
மத்திய பிரதேசத்தின் சில மாவட்டங்களில் மொத்த மக்கள் தொகையில் ஐம்பது சதவிகிதம் பேர் பழங்குடிகள்.
அதுபோல இந்தியாவின் வைரச் சுரங்கம் என்று மத்திய பிரதேசத்தைச் சொல்ல லாம். செம்பு, நிலக்கரி, மாங்கனிஸ், பாக்சைட், டோலமைட் என்று கனிம வளம் மத்திய பிரதேசத்தில் அதிகம். 11 மெட்ரிக் டன் கிராபைட் அங்கே கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.
அரசியலும் ஆட்சியாளர்களும்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் 52 மாவட்டங்கள். 230 சட்டமன்றத் தொகுதிகள், 29 நாடாளுமன்றத் தொகுதிகள்.
நீண்டகாலம் காங்கிரஸ் கட்சிக்காரர்களே மத்திய பிரதேச முதல்வர்களாக இருந்தநிலையில் இதை மாற்றியவர் கோவிந்த் நாராயண்சிங். 1967ல் சம்யுக்தா விதயாக் தளம் என்ற அமைப்பின் சார்பாக அவர் முதல்வரானார்.
ஆனால், ரொம்ப காலம் அவர் நீடிக்கவில்லை. அதன்பிறகு 1977 முதல் 1980 வரை ஜனதாவைச் சேர்ந்த மூன்று முதல்வர்கள் மாறி மாறி மத்திய பிரதேசத்தில் ஆட்சி செலுத்தினர்.
1980 முதல் 1990 வரை மீண்டும் காங்கிரஸ் காலம். அர்ஜுன்சிங், மோதிலால் வோரா, ஷியாம சரண்சுக்லா போன்றவர்களுக்குப் பிறகு பாரதிய ஜனதா சார்பாக சுந்தர்லால் பத்வா.
அதன்பின் காங்கிரஸ் கட்சியின் திக்விஜய்சிங். பிறகு பா.ஜ.க சார்பாக உமாபாரதி, பாபுலால் கௌர், சிவராஜ்சிங் சௌகான் போன்றவர்கள்.
பின்னர் குறுகிய காலம் காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் முதல்வரானார். எண்ணி சில மாதங்களில் அவரது ஆட்சி கலைந்துபோக, பிறகு மீண்டும் சிவராஜ்சிங் சௌகான் முதல்வரானார். இன்றுவரை அவர்தான் முதல்வர்.
இந்தநிலையில்தான் தற்போது சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி உள்ளது மத்திய பிரதேசம். நவம்பர் 17ஆம்தேதி மத்தியபிரதேசத்தில் வாக்குப்பதிவு. டிசம்பர் 3ஆம்தேதி முடிவுகள் தெரியப்போகின்றன.
பரபரப்பான ஒரு தேர்தலை எதிர்கொண்டு நிற்கிறது இந்தியாவின் இதயம்.
(களத்தை வலம் வருவோம்)
கட்டுரையாளர் குறிப்பு:
மோகன ரூபன் மூத்த பத்திரிகையாளர், கவிஞர், மொழி பெயர்ப்பாளர், இயற்கை ஆர்வலர்.
உலக அரசியலில் இருந்து உள்ளூர் அரசியல் வரை பல்வேறு கட்டுரைகளை எழுதியிருக்கிறார், அரசியல் மட்டுமல்லாமல் வரலாறு, அறிவியல் துறைகளிலும் ஆர்வம் மிக்கவர். உலக அளவிலான புதிய தகவல்களை தேடிப் படித்து தமிழில் தந்து வருபவர். அந்தோணியார் காவியம், உவரியும் ஓபீரும், சந்தன உவரியில் சாலமன் கப்பல், திமிங்கல வேட்டை (மோபி டிக்), பிணந்தின்னிக் கழுகு (அமெரிக்க வல்லரசு சதிகள் பற்றியது), ஆண்டுவன் சேரல் (வரலாற்றுப் புதினம்), கவின் மிகு கானகம் உள்ளிட்ட 17 நூல்களின் ஆசிரியர்.
சென்னையில் குடியேறும் அமீர் கான் : காரணம் என்ன?
600 படுக்கைகள்… அருணை பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைத்த முதல்வர்!
தலைவர் 170 : ரஜினி – அமிதாப் காட்சிகள் மும்பையில் ஷூட்டிங்!
Comments are closed.