நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி சேரக் கூடும் என கிளப்பிவிடப்பட்ட வதந்திகளுக்கு, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் ‘ஐவர் குழுவை’ அமைத்து காங்கிரஸ் மேலிடம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகள், விசிக, மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
2004-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை திமுக- காங்கிரஸ் கூட்டணி நீடித்தது. ஈழத் தமிழர் பிரச்சனையால் இந்த கூட்டணி முறிந்தது. 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் தனித்தே போட்டியிட்டு தோல்வியைத் தழுவின.
இதனையடுத்து 2016-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி மீண்டும் அமைந்தது. திமுக 176 தொகுதிகளில் போட்டியிட்டு 89 இடங்களிலும் 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற்றன.
2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி நீடித்தது. அத்தேர்தலில் இந்த கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றது.
இதனையடுத்து 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் பின்னர் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணியே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் புதியதாக தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய், தம்மை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி; ஆட்சியில் பங்கு அளிப்போம் என அறிவித்திருந்தார். மேலும் நடிகர் விஜய் தரப்பிலும் காங்கிரஸ் தரப்பிக் சில தலைவர்களும் தவெக- காங்கிரஸ் ‘கூட்டணிக்கான’ சில முயற்சிகளை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
ஆனால் காங்கிரஸ் மேலிடம், திமுக கூட்டணியிலேயே நீடிக்க விரும்பியது. இருந்த போதும் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும்; விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்கும்; விஜய்யுடன் ராகுல் காந்தி பேசிக் கொண்டிருக்கிறார் என்றெல்லாம் பல ‘வதந்திகள்’ கிளப்பிவிடப்பட்டன. காங்கிரஸ் கட்சிக்குள் திமுக கூட்டணியை விரும்பாத சிலரது ‘சித்து வேலைகளால்’ இத்தகைய வதந்திகள் பரப்பிவிடப்பட்டு வந்தன.
இந்த நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களின் காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள், நிர்வாகிகள், மூத்த தலைவர்களுடன் அண்மையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போதும், திமுக கூட்டணியைத் தவிர வேறு எந்த ஒரு முயற்சியும் கிடையவே கிடையாது என காங்கிரஸ் மேலிடம் திட்டவட்டமாக கூறிவிட்டது.

இந்த பின்னணியில்தான், திமுகவுடன் மட்டுமே கூட்டணி என்பதை உறுதி செய்ய ‘தொகுதி பங்கீட்டுக்கான’ பேச்சுவார்த்தை குழுவை காங்கிரஸ் மேலிடம் அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த குழுவில், தமிழகத்துக்கான மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா மற்றும் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த அறிவிப்பின் மூலம் தவெக- காங்கிரஸ் கூட்டணி என்ற வதந்திகளுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது அக்கட்சி மேலிடம். இதனை குறிப்பிடும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், ” அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன்” என தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
