நாங்கள் ஆட்சிக்கு வந்தால்…ராகுல் காந்தி தரும் 5 வாக்குறுதிகள்!

Published On:

| By vivekanandhan

five guarantees from congress

காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று (மார்ச் 9, 2024) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர். ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதியாக 5 முக்கியமான உத்திரவாதங்களைக் கொடுத்திருக்கிறார், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதனை நிறைவேற்றுவோம் என்று ப.சிதம்பரம் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார். அவை பின்வருமாறு:

  • 30 லட்சம் வேலை:

இந்தியாவில் வேலையின்மை கோரத்தாண்டவம் ஆடுகிறது. பட்டதாரிகள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை 42% ஆக இருக்கிறது. இதைப் போக்க முதல்வழி மத்திய அரசில் உள்ள காலியிடங்களை நிரப்புவது. மத்திய அரசு நிறுவனங்கள், மத்திய கல்வி நிலையங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மத்திய மருத்துவமனைகள் உட்பட அனைத்தையும் சேர்த்தால் 30 லட்சம் காலியிடங்கள் உள்ளன. காங்கிரஸ் அரசு அமைந்தால் முதல் உத்தரவாதம் இந்த 30 லட்சம் காலியிடங்களையும் நிரப்புவோம்.

  • கேள்வித்தாள் கசிவைத் தடுக்க புதிய சட்டம்:

அரசு நடத்தும் தேர்வுகளில் கேள்வித்தாள் கசிவது வழக்கமாகிவிட்டது. உத்திரப்பிரதேசத்தில் மட்டும் கடந்த 10-15 நாட்களில் 2 கேள்வித்தாள்கள் கசிந்துள்ளன. போலிஸ் கான்ஸ்டபிள் தேர்வை 48 லட்சம் விண்ணப்பதாரர்கள் எழுதினார்கள். 2 நாட்கள் கழித்து கேள்வித்தாள் கசிந்துவிட்டது என்று சொல்லி அதை ரத்து செய்தார்கள். இதனால் ஏராளமான குடும்பங்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். ரிவ்யூ அதிகாரி பதவிக்கான தேர்வுக்கு 10 லட்சம் விண்ணப்பதாரர்கள் பங்குபெற்றார்கள். அதையும் ரத்து செய்தார்கள். இதற்கு ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றி, கேள்வித்தாள் கசிந்தால் குற்றவாளிகளை அடையாளம் கண்டு விரைவு நீதிமன்றங்களில் அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம். அதுமட்டுமல்ல தேர்வு எழுதிய பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் தருவோம்.

  • Right to Apprenticeship act (பயிற்சி பெறும் உரிமைக்கான சட்டம்):

இளைஞர்கள் படிப்பு முடித்தவுடன் பயிற்சி கிடைக்கப்பெறுவதை சட்டப்பூர்வ உரிமையாக மாற்றுவோம். தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் இரண்டுமே கட்டாயமாக பயிற்சியாளர்களை பணிக்கு எடுக்க வேண்டும். ஒரு ஆண்டு பயிற்சி மற்றும் ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை தரப்படும். டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு இத்திட்டம் பொருந்தும். இந்தியாவில் 10 லட்சம் நிறுவனங்களில் பயிற்சியாளர்களை நியமிக்க முடியும். இதனால் ஏராளமான இளைஞர்களுக்கு படிப்பு முடிந்தவுடன் ஒரு வருடம் பயிற்சியும், ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகையும், அத்துடன் பயிற்சி முடிந்தவுடன் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

  • கிக் பணியாளர்களுக்கான (GIG workers) சமூக பாதுகாப்பு:

GIG workers என்று சொல்லக்கூடிய சொமேட்டோ, ஸ்விக்கி மாதிரியான நிறுவனங்களுக்காக வேலை செய்யக் கூடியவர்களுக்கு எந்த உரிமையும் எந்த சட்டப் பாதுகாப்பும் கிடையாது. இவர்களுடைய வேலையை ஒழுங்குபடுத்தி இவர்களுக்கு ஒரு சமூகப் பாதுகாப்பு தரும் சட்டத்தைக் கொண்டுவருவோம்.

  • ஸ்டார்ட் அப் தொடங்க உதவித்தொகை:

ஸ்டார்ட் அப் எனும் தொழில் தொடங்க பல இளைஞர்களுக்கு திறமை இருந்தும் அவர்களால் தொடங்க முடியவில்லை. அவர்களை ஊக்குவிக்க அவர்களுக்கு முதலீட்டுக்கான உதவி செய்ய வேண்டும். அத்தகைய புதிய தொழில்களைத் தொடங்க 10,000 கோடி ரூபாய் அரசு நிதியில் இருக்கிறது. அதில் பாதித்தொகை 5,000 கோடி ரூபாயை எடுத்து, ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு 10 கோடி ரூபாய் என்று ஒதுக்கினால் மொத்தமுள்ள 543 தொகுதிக்கு 5500 கோடி ரூபாய் அளவுக்கு தேவைப்படும். இப்படி பிரித்து ஒவ்வொரு தொகுதியிலும் இளைஞர்கள் தொழில் தொடங்க முன்வந்தால் அவர்களுக்கு உதவி செய்யப்படும். இதன்மூலம் பின்தங்கிய, பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் பழங்குடி இளைஞர்களுக்கு பல வாய்ப்புகள் உருவாகும்.

இவ்வாறு ப.சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

– விவேகானந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

போதைப்பொருள் கடத்தல்: ஜாபர் சாதிக் கைது!

திமுக – காங்கிரஸ் இடையே இன்று தொகுதி பங்கீடு? சென்னை வரும் டெல்லி தலைவர்கள்!

அப்பல்லோவில் இருந்து அஜித் டிஸ்சார்ஜ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share