மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து புதுவை அரசு மீனவர்களுக்கான வானிலை எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து புதுவை மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியாகி உள்ள செய்தி குறிப்பில், ” இந்திய அரசின், சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இன்றைய (நவம்பர் 24) அறிவிப்பில் 25-11-2025 அன்று முதல் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, புதுச்சேரியில் உள்ள மீன்பிடி விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று (24-11-2025) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளபடுகிறது. மேலும் மீனவர்கள் எவரேனும் அக்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருப்பின் அவர்களை உடனடியாக கரைக்கு திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், விசைபடகு உரிமையாளர்கள் நலக்கங்கம், தேங்காய்திட்டு, FRP பைபர் போட் உரிமையாளர்கள் சங்கம், தேங்காய்திட்டு, மீனவ கிராம பஞ்சாயத்து / கோவில் நிர்வாக குழுக்கள் / மக்கள் குழுக்கள் தங்கள் கிராமங்களில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள படகு உரிமையாளர்களுக்கு தகவல் தெரியும் பொருட்டு இதனை உரிய வகையில் அறிவிப்பு செய்து இது போன்ற மழை மற்றும் கடல் சீற்றகாலங்களில் அவர்களின் மீன்பிடிபடகுகள் மற்றும் அது சம்பந்தமான உபகரணங்களை பாதுகாப்பான இடங்களில் வைத்து பாதுகாக்குமாறு எச்சரிக்கை அறிவிப்பு செய்திட வேண்டுமென இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
