மீனவர்கள் கைது: வேலைநிறுத்த போராட்டம்!

Published On:

| By admin

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

நேற்று ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் ஏப்ரல் 12ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் “வங்கக்கடலில் கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 12 பேர் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

மார்ச் 29 ஆம் தேதி முதல் நேற்று வரையிலான 5 நாட்களில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும். ஏற்கனவே 7 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்களையும் சேர்த்து இந்த வாரத்தில் மட்டும் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

தொடர் கைதுகளை அனுமதிக்கக்கூடாது. மீனவர் சிக்கலுக்கு தீர்வு காண அண்மையில் இரு நாட்டு கூட்டு பணிக்குழுக்களின் கூட்டம் நடைபெற்றது. அதில் மீனவர்கள் மீது கடுமை காட்டக்கூடாது என இந்தியா கூறிய பிறகும் கைது தொடர்வது நியாயமல்ல.கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் மீனவர்கள் கைதை கண்டித்து போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி நாளை( ஏப்ரல் 4) ஒருநாள் மட்டும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

**-வினிதா**

Photo of author
admin
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share