வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் முதலாவது ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 13) தொடங்கி வைத்தார்.
பிரதமர் மோடி, மிசோரம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மிசோரமில் ரூ.9,000 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். ரயில்வே, சாலைகள், எரிசக்தி, விளையாட்டு உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும்.
மேலும் சாய்ராங் –டெல்லி ராஜதானி விரைவு ரயில் போக்குவரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன் மூலம் மிசோரம் தலைநகர் ஐஸ்வாலுக்கு டெல்லியுடன் நேரடி ரயில் இணைப்பு வசதி கிடைத்துள்ளது. மிசோரம் மாநிலத்தின் முதலாவது ரயில் சேவை இது.
விளையாட்டு மேம்பாட்டுக்காக கேலோ இந்தியா பல்நோக்கு உள் விளையாட்டரங்கிற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பேசியதாவது: ஐஸ்வால் இன்று முதல் இந்திய ரயில்வே வரைபடத்தில் இணைந்துள்ளது. மிக கடுமையான சவால்களுக்கு இடையே இந்த ரயில் பாதை உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகருடன் ரயில் பாதை மூலமாக மிசோரம் தலைவர் ஐஸ்வால் இணைந்துள்ளது.
இந்த ரயில் சேவை மூலம் மிசோரம் மக்கள் , நாட்டின் பல்வேறு சந்தை வாய்ப்புகளைப் பெறக் கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது. மிசோரம் மக்கள் கல்வி, சுகாதார வசதிகளை எளிதாக பெற முடியும். மிசோரம் மாநிலத்தில் சுற்றுலா, போக்குவரத்து என பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள் பெருகும்.
இதுவரையிலான ஆட்சியாளர்களின் வாக்கு வங்கி அரசியலால் மிசோரம் மாநிலம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. கடந்த 11 ஆண்டுகளாக வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. வடகிழக்கு மாநிலங்கள் பலவும் தற்போது நாட்டின் ரயில்வே வரைபடத்தில் இணைந்துள்ளன. மொபைல் இணைப்புகள், இணைய சேவைகள், மின்சார வசதி, குடிநீர் இணைப்புகள், சமையல் எரிவாயு இணைப்புகள் என அனைத்தும் வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்றடைந்துள்ளன.
உதான் திட்டம் மூலம் மிசோரம் மாநிலம் விரைவில் விமான சேவையை பெற உள்ளது; ஹெலிகாப்டர் போக்குவரத்து சேவையும் தொடங்கப்பட உள்ளது. கிழக்கு ஆசியாவை நோக்கிய மத்திய அரசின் கொள்கையில் மிசோரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி தற்போது 7.8% ஆக உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இந்தியாவில் ரயில் போக்குவரத்து 172 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போதுதான் மிசோரம் மாநிலம் முதலாவது ரயில் சேவையைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
