சினிமாவில் சேர்ந்து கொஞ்ச நாள் எடுபிடி வேலை பார்த்து, அப்புறம் ஷூட்டிங் போய் வேலை செய்து, உதவி இயக்குனர் இணை இயக்குனர், வசனகர்த்தா, கதாசிரியர் என்று வளர்ந்து, இயக்குனர் ஆனது எல்லாம் அந்தக் காலம்.
இப்போது, சின்னதா காசு போட்டு ஒரு குறும்படம் எடுத்து விட்டால் போதும். அதை வைத்தே ஒரு தயாரிப்பாளரை பிடித்து அப்படியே இயக்குனர் ஆகி விடலாம்.
உண்மையில் குறும்படம் என்பது வேறு உலகம். ஆனால் நம்ம ஊரில் தான் அது திரைப்படத்துக்கான குறுக்கு வழி என்று தப்பாகப் போய்விட்டது. குறும்பட இயக்குனர்கள் சிலர் சினிமா இயக்குநராகி ஜெயித்தாலும் பல சிறப்பான குறும்பட இயக்குனர்கள் எடுக்கும் திரைப்படம் சுவையாக இருப்பதில்லை.
எனினும் நல்ல குறும்படம் என்பது மிக அழகான ஒன்று.
எனவே குறும்படங்கள் எப்போதும் கவனிக்கத் தகுந்தவை. அப்படி ஒரு விழாதான் First frame- 2025 குறும்பட போட்டி விருது விழா.
தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு, இயக்குனர் K பாக்யராஜ், ஓவியர் டிராட்ஸ்கி மருது, இயக்குனர் அரவிந்த்ராஜ், இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் மணிகண்டன், நடிகர் பகவதி பெருமாள், இயக்குநர் குட்டி ரேவதி, Gembrio pictures MD சுகுமார் பாலகிருஷ்ணன், விகடன் K ராஜசேகரன், இயக்குனர் ராகவ் மிர்தாத், இயக்குனர் சுகுமார் அழகர்சாமி, இயக்குனர் பாலமுருகன், ஊடகவியலாளர் உமாபதி கிருஷ்ணன் ஆகியோர் இந்த விருது விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வின் துவக்கத்தில் ‘தமிழ் பிலிம் பேக்டரி’ என்ற நிறுவன லோகோவை, தாணு மற்றும் k பாக்யராஜ் வெளியிட இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் மணிகண்டன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
பதிவு செய்யப்பட்ட 48 குறும்படங்களில்…. துணை, ஆலம் நாட், அரைவேக்காடு, Coffee with Avanthika, shadow, Low gun, கடல் கொண்டான், Love Lust retro, காஞ்சனா, மீண்டும் மழை ஆகிய சிறந்த 10 குறும்படங்கள் திரையிடப்பட்டன.
அரைவேக்காடு, கடல் கொண்டான், காஞ்சனா, நீயே யாவுமாகி ஆகிய படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரங்களுக்கு விருது வழங்கப்பட்டது.
சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த எடிட்டர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதை, சிறந்த திரைக்கதை, சிறந்த வசனம், சமூக விழிப்புணர்வு, சமூக உணர்வு, சிறப்பு நடுவர் விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.
ஆலம்நாட் குறும்படத்திற்கு மூன்றாம் பரிசு ரூ 20,000 வழங்கப்பட்டது, Love Lust retro, கடல் கொண்டான் படங்களுக்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது. பரிசுத் தொகை தலா 25,000 வழங்கப்பட்டது
மீண்டும் மழை படத்திற்கு முதல் இடத்திற்கான விருதும், பரிசுத் தொகை ரூ 1 லட்சமும் வழங்கப்பட்டது.
Firstframe- 2025 விருது விழாவில் முதல் பரிசு வாங்கும் அணியுடன் இணைந்து திரைப்படம் தயாரிக்கவுள்ளதாக Gembrio pictures MD திரு சுகுமார் பாலகிருஷ்ணன் அறிவித்தார். அரைவேக்காடு படத்தையும் தயாரிக்க விரும்புகிறோம் என்று ஒரு தயாரிப்பாளர் அறிவித்தார்.
எடுக்கப்படும் படம் அரைவேக்காடாக இல்லாமல் இருந்தால் சரிதான்.
–ராஜ திருமகன்
