ஆகஸ்ட் 17-ம் தேதி தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் சிவகாசியில் நடைபெறும் பாதுகாப்பு விழிப்புணர்வு மாநாட்டில் முதன்முறையாக பட்டாசு வர்த்தகக் கண்காட்சி இடம் பெற உள்ளது.
சிவகாசி பட்டாசுகள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தாராளமாக கிடைத்தாலும், சிவகாசியில் 60 முதல் 80 சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில் பட்டாசு விற்பனை செய்யப்படுவதாலும்,
நேரடியாக வெடித்து பார்த்து வாங்கலாம் என்பதாலும் தமிழகம் மட்டுமின்றி, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் வாடிக்கையாளர்கள் சிவகாசி வருகின்றனர்.
தீபாவளி பட்டாசு விற்பனை ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கு அன்று பூஜையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி ஆகஸ்ட் 3 அன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசி சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து பட்டாசு விற்பனை கடைகளும் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு தீபாவளி விற்பனை தொடங்கப்பட்டது.
இந்த நிலையில், ஆகஸ்ட் 17-ம் தேதி தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் சிவகாசியில் நடைபெறும் பாதுகாப்பு விழிப்புணர்வு மாநாட்டில் முதன்முறையாக பட்டாசு வர்த்தகக் கண்காட்சி இடம் பெற உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் ராஜா சந்திரசேகர், பொதுச் செயலாளர் இளங்கோவன், பொருளாளர் கந்தசாமி ராஜன் ஆகியோர் கூறும்போது,
”சிவகாசி – திருத்தங்கல் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் 4-வது பாதுகாப்பு விழிப்புணர்வு மாநில மாநாடு ஆகஸ்ட் 17, 18 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இதில் 17-ம் தேதி மாலை சிவகாசியில் முதன்முறையாக பட்டாசு வர்த்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.
அதன்பின் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டமும், தீயணைப்புத் துறை சார்பில் தீ பாதுகாப்பு மற்றும் தீ தடுப்பு செயல் விளக்க நிகழ்வும் நடைபெறுகிறது.
18-ம் தேதி மாநாடு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், மக்கள் பிரதிநிதிகள், பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர்” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், “கடந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசு விற்பனை அமோகமாக நடைபெற்றதால் கடைசி நேரத்தில் குழந்தைகள் அதிகம் விரும்பும் பேன்சி ரக பட்டாசுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் தீபாவளி முடிந்த ஒரு வாரத்திலேயே அடுத்த ஆண்டுக்கான பட்டாசு உற்பத்தி தொடங்கியது.
ஆனால், தொடர் விபத்துகள் மற்றும் ஆய்வுகள், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பட்டாசு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு முன்கூட்டியே பட்டாசுகளை உற்பத்தி செய்துள்ளோம்” என்றும் கூறியுள்ளனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமெரிக்க அரசியல் குழப்பமும் அதன் சமூகப் பொருளாதாரமும்! பகுதி 1
டாப் 10 நியூஸ்: தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதல் கோட் டிரெய்லர் அப்டேட் வரை!