புலிக்கு பிறந்தது பூனையாகாது : சாதனை பட்டியலில் சந்தர்பால் & கோ!

Published On:

| By christopher

ஒவ்வொரு மகனுக்கும் தன் தந்தையின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் நமக்கு பிடித்த துறையில் இருந்தே அந்த சாதனையை தந்தையே மெச்சும்படி செய்கின்ற வாய்ப்பு சிலருக்கு மட்டுமே கிடைக்கும்.

அதைவிட தந்தை சாதனை படைத்த அதே துறையில், அவருக்கு மேலாக சென்று அந்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு வெகு சிலருக்கு மட்டுமே கிடைக்கும்.

இந்நிலையில் தான் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இரட்டைசதம் அடித்த தன் தந்தை ஷிவ்நரேன் சந்தர்பாலின் சாதனையை முறியடித்துள்ளார் அவரது மகன் டேகனரைன் சந்தர்பால்.

கடந்த ஆண்டு நவம்பரில் வலிமைமிக்க ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டெஸ்ட் அரங்கில் தனது 26 வயதில் அறிமுகமானார் டேகனரைன். முதல் ஆட்டத்திலேயே அரைசதம் அடித்து அசத்தினார்.

33 ஆண்டுகால சாதனை முறியடிப்பு

அதனைத்தொடர்ந்து புலவாயோவில் தற்போது ஜிம்பாவே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் டேகனரைன் பல்வேறு சாதனைகளில் இடம்பிடித்துள்ளார்.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் கிரேக் பரத்வைட் மற்றும் டேகனரைன் சந்தர்பால் இருவரும் களமிறங்கினர்.

முதல் நாளில் நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் கடந்தனர். அதனைதொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது நாளில் முதல் நாளுக்கு முற்றிலும் மாறாக ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.

first double century by Tagenarine Chanderpaul son of Shivnarine

கேப்டன் பரத் வைட் தனது 12வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த நிலையில் சிறிது நேரத்தில் டேகனரைன் டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

தொடர்ந்து 3வது நாளிலும் இருவரும் ஆக்ரோசமான ஆட்டத்தையே தொடர்ந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 298 ரன்களை கடந்தபோது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற சாதனையை படைத்தனர்.

இதன்மூலம் டேகனரைன் – பரத்வைட் ஜோடியானது 1990 ஆம் ஆண்டில் கோர்டன் க்ரீனிட்ஜ் மற்றும் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் ஆகியோரின் முந்தைய அதிக ரன்கள் குவித்த தொடக்க ஜோடி என்ற 33 ஆண்டுகால சாதனையை முறியடித்தது.

தந்தை – மகன் இரட்டைச் சதம்

இருவரும் இரட்டைச் சதத்தை நோக்கி முன்னேறி கொண்டிருந்த நிலையில் கேப்டன் பரத் வைட் 182 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு மொத்தமாக 336 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

எனினும் மறுபக்கம் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த டேகனரைன் 465 பந்துகளின் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியிலேயே முதல் இரட்டை சதத்தை (207) பதிவு செய்த அவர், தனது தந்தையின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரான 203 ரன்களை தாண்டினார்.

மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது தந்தை-மகன் ஜோடி என்ற பெருமையை ஷிவ்நரேன் சந்தர்பால் – டேகனரைன் சந்தர்பால் பெற்றுள்ளனர்.

first double century by Tagenarine Chanderpaul son of Shivnarine

முன்னதாக சர்வதேச டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த தந்தை – மகன் என்ற பெருமையை பாகிஸ்தானைச் சேர்ந்த ஹனிப் முகமது – சோயிப் முகமது பெற்றனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுக்கு 447 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து 4வது நாளில் பேட்டிங் செய்து வரும் ஜிம்பாவே அணி 7 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்துள்ளது.

கைவசம் இன்னும் ஒருநாள் மட்டுமே மீதமுள்ள நிலையில் முதல் இன்னிங்ஸ் முடிவடையாதது வெஸ்ட் அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது.

அதே வேளையில் 255 ரன்கள் பின் தங்கியுள்ள ஜிம்பாவே அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

குடிமைப்பணித் தேர்வு வயது வரம்பு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

ஈரோடு கிழக்கு தொகுதி: வேட்பு மனு தாக்கல் நிறைவு!

அதானி… அதானி… அதானி…: நாடாளுமன்றத்தில் கொந்தளித்த ராகுல்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share