தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நேற்று (ஜனவரி 6) முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று இரவு 10 மணி முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.
நேற்று இரவு 10 மணிக்குள்ளே மக்கள் தங்களது வேலைகளை முடித்துவிட்டு தங்களின் வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்தனர். பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டு, அனைத்தும் பணிமனைக்குள் கொண்டுவிடப்பட்டன. தெருக்களில் மக்கள் நடமாட்டமும், சாலையோர கடைகளும் இல்லாததால் தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன. நேற்று இரவு 10 மணியே நள்ளிரவு 12 மணி போல் காட்சியளித்தது. ஒருசில இடங்களில் ஊடரங்கு அமலுக்கு வந்த பிறகும் வியாபாரம் நடந்துகொண்டிருந்தது, அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் தேவையின்றி வெளியே சுற்றி திரிந்த மக்களை முதல் முறை என்பதால் போலீஸார் எச்சரித்து அனுப்பினர். அத்தியாவசிய பணிகள் மற்றும் ரயில் நிலையங்களுக்குச் சென்றவர்களிடம் உரிய ஆவணங்களைச் சரிபார்த்த பிறகு போலீஸார் அனுமதித்தனர்.
**சென்னை**
சென்னையில் அண்ணா சாலை, காமராஜர் சாலை, ஜி.பி.ரோடு, ஸ்டெர்லிங் சாலை, டி.எச்.சாலை, பெரியார் சாலை, ஜி.என்.செட்டி சாலை, உஸ்மான் சாலை என நகரின் முக்கிய சாலைகளும், முக்கிய சாலைகளை இணைக்கும் இணைப்புச் சாலைகளும், மேம்பாலங்களும் தடுப்புகள் கொண்டு மூடப்பட்டன.
சென்னையில் மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையிலும், ஆவடியில் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையிலும், தாம்பரத்தில் ஆணையர் ரவி தலைமையிலும் கண்காணிப்புப் பணி நடைபெற்றது. இவர்களின் தலைமையில் சென்னையில் 312 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து 10,000 போலீஸார் கண்காணிப்பு மற்றும் வாகனச் சோதனை பணியில் ஈடுபட்டனர். போலீஸார் வாகனங்களில் நகர் முழுவதும் ரோந்து சென்று மக்கள் நடமாட்டத்தை கண்காணித்தனர்.
**மதுரை**
அதுபோன்று மதுரையிலும் 10 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 300க்கும் மேற்பட்ட போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவு நேர ஊரடங்கின்போது பொதுமக்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஒரு போலீஸ் நிலையத்துக்கு இரண்டு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீஸார் நியமிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ஊரடங்கை மீறி வெளியே வாகனங்களில் சுற்றியவர்களிடம், முதன்முறை என்பதால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
**நெல்லை**
நெல்லை நகருக்குள் மாநகரக் காவல் ஆணையர் செந்தாமரைக்கண்ணன் தலைமையில் துணை ஆணையர் சுரேஷ்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகளும், நெல்லை புறநகர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் போலீஸ் அதிகாரிகளும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நெல்லை மாநகர எல்லை பகுதியில் ஏழு சோதனைச் சாவடிகளும், மாநகரின் உள்பகுதியிலும் 18 இடங்களில் போலீஸார் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். இரவு 10 மணிக்கு மேல் வெளியே நடமாடிய மக்களை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அத்தியாவசிய பணிகள் தவிர மற்ற வாகனங்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர்.
**திருச்சி**
திருச்சி மாவட்டத்திலும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்ததையடுத்து, நகரின் பல்வேறு இடங்களுக்கு போலீஸார் ரோந்து வாகனங்களில் சென்று ஒலிபெருக்கி மூலம் கடைகளை மூடும்படி எச்சரிக்கை விடுத்தனர்.
வியாபாரிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டு, காந்தி மார்க்கெட்டில் இரவு நேரத்தில் மொத்த வியாபாரம் மட்டும் நடத்தவும், பகல் நேரத்தில் சில்லறை வியாபாரம் நடத்தவும் அனுமதிக்கப்பட்டதால், அந்தக் கடைகள் மட்டும் செயல்பட்டது.
**கோவை**
இரவு நேர ஊரடங்கை முன்னிட்டு கோவையில் 700க்கும் மேற்பட்ட போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நகருக்குள் 30 இடங்களில் தடுப்புகளைக் கொண்டு தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்தும், மாநகர எல்லை பகுதிகளில் 11 சோதனைச் சாவடிகள் அமைத்தும் போலீஸார் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியே சுற்றுபவர்களைக் கண்காணிக்க, 23 ரோந்து வாகனங்களும், 44 இருசக்கர வாகனங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களிலும் நேற்று இரவு போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
காலை 5 மணியுடன் இரவு நேர ஊரடங்கு முடிவுக்கு வந்தது. இதையடுத்து மக்கள் சாலைகளில் நடமாட ஆரம்பித்தனர். பேருந்துகளும் இயங்கத் தொடங்கின. வெளிமாநிலங்களுக்குச் செல்லும் தொலைதூர பேருந்துகளின் சேவையும் தொடங்கியது. பால், செய்தித்தாள் விநியோகம் உள்ளிட்ட காலை பணிகளும் நடைபெறத் தொடங்கின.
**-வினிதா**
�,