ADVERTISEMENT

தமிழகத்தின் பல்லுயிர் பாரம்பரியப் பகுதி அரிட்டாபட்டி

Published On:

| By Jegadeesh

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி, மீனாட்சிபுரத்தை உள்ளடக்கிய 193.215 ஹெக்டேர் பகுதியை பல்லுயிர் பாரம்பரியப் பகுதியாக தமிழ்நாடு அரசு கடந்த 2020 டிசம்பரில் அறிவித்தது.

இந்நிலையில், உயிர்ப்பன்மைய முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியை தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரியப் பகுதியாக அறிவித்து தமிழ்நாடு அரசு இன்று (நவம்பர் 22 ) அரசாணை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

அதில், பல்லுயிர் மரபுத் தலங்கள் என்பது சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பு , கடலோர மற்றும் உள்ளூர் நீர்நிலைகள், பல்லுயிர் தன்மை மிக்க தாவர, விலங்கின சிற்றினங்களின் வாழ்விடங்கள் , பரிணாம முக்கியத்துவம் வாய்ந்த சிற்றினங்களின் வாழ்விடங்கள் போன்றவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்தில் அமைக்கப்பட்டது.

அரிட்டாப்பட்டி கிராமம் என்பது ஏழு சிறுகுன்றுகளை தொடர்ச்சியாக கொண்டுள்ள பகுதியாகும். இந்த மலைக்குன்றுகளின் தனித்துவமான நிலப்பரப்பு இப்பகுதியின் முக்கிய நீர் ஆதார பகுதியாக செய்ல்படுகிறது. 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்று குளங்கள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளது.

ADVERTISEMENT

இங்குள்ள ஆனைக்கொண்டான் ஏரி, பதினாறாம் நூற்றாண்டில் பாண்டியர்களின் ஆட்சியில் கட்டப்பட்டது. அரிட்டாப்பட்டி கிராமத்தில் உள்ள மலைப்பகுதிகளில் 250 பறவையினங்கள் உள்ளன, இதில் லகர் இராசாளி , ஷாஹீன் இராசாளி, மற்றும் இராசாளிப் பருந்து ஆகிய 3 முதன்மையான கொன்றுண்ணிப் பறவையினங்கள் உள்ளன. எறும்புத் திண்ணிகள், மலைப்பாம்பு மற்றும் அரிய வகை தேவாங்கு ஆகிய வனவிலங்குகளும் உள்ளன. இப்பகுதி பல பறைவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்விடமாக உள்ளது.

மேலும், இங்கு பல்வேறு சமண சிற்பங்கள், சமண படுக்கைகள் , தமிழ் பிரமி கல்வெட்டுகள், வட்டெழுத்து கல்வெட்டுகள் , 2200 ஆண்டுகள் பழமையான குடைவரைக் கோயில்கள் உள்ளன. இந்த வரலாற்றுச் சின்னங்கள் இப்பகுதிக்கு கூடுதல் சிறப்பை அளிக்கிறது.

ADVERTISEMENT

அரிட்டாபட்டியை பல்லுயிர்ப் பாரம்பரியத் தலமாக அறிவிப்பதற்கான முடிவு கிராம ஊராட்சிகள் மற்றும் மாநில தொல்லியல் துறை , தமிழ்நாடு கனிம நிறுவனம் போன்ற பல துறைகளின் ஆலோசனைகளுக்கு பிறகு எடுக்கப்பட்டது என்றும் இந்த அறிவிப்பு இப்பகுதியின் வளமான உயிரியல் மற்றும் வரலாற்றுக் களஞ்சியத்தைப் பாதுகாக்க உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் அரசாணைக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உயிர்ப்பன்மைய வளமிக்க மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி, மீனாட்சிபுரத்தை உள்ளடக்கிய 193.215 ஹெக்டேர் பகுதியை உயிர்ப்பன்மைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு மேற்கொண்டுள்ள இம்முயற்சிக்கு பாராட்டுகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஃபிஃபா கால்பந்து: முதல் கோல் அடித்த மெஸ்ஸி

“சைதை சாதிக்கைவிட மோசமாக பேசினார் சூர்யா”: காயத்ரி ரகுராம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share