தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இந்திய கடற்படை இன்று(அக்டோபர் 21) துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இதில் மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் வீரவேலுவுக்கு குண்டு பாய்ந்தது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும் பாக் விரிகுடாவின் முக்கியமான கடற்பரப்பில் இந்திய கடற்படை தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
அக்டோபர் 21, 2022 அதிகாலையில், இந்தியா – இலங்கை சர்வதேச கடல் எல்லைக் கோட்டிற்கு (IMBL) அருகிலுள்ள பாக் விரிகுடாவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படைக் கப்பலால் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று காணப்பட்டது.
பலமுறை எச்சரித்தும் படகு நிற்கவில்லை. கப்பல், வழக்கமான இயக்க நடைமுறைகளின்படி, படகை நிறுத்த எச்சரிக்கை காட்டி சுட்டது.
சந்தேகத்திற்கிடமான வகையில் படகில் பயணித்த ஊழியர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த நபருக்கு கப்பல் மூலம் முதலுதவி அளிக்கப்பட்டது.
இந்திய கடற்படை சேடக் ஹெலிகாப்டர் மூலம் ராம்நாட்டில் உள்ள ஐஎன்எஸ் தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் மேல் மருத்துவ சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு (தற்போது மதுரையில் சிகிச்சை பெற்றுவருகிறார்) அனுப்பி வைக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
கலை.ரா
தமிழக மீனவர்கள் சுடப்பட்டது கண்டனத்துக்குரியது: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
