சென்னை அண்ணா சாலையில் உள்ள BSNL அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தீ விபத்தால் மின்வாரிய சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தென் மண்டல பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 8 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தில் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து 10 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்த தீணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தீ கீழிருந்து மேல் நோக்கி பரவி வருவதால் அடுத்தடுத்த தளத்திற்கு தீ பரவி வருகிறது.
மேலும் இன்று அலுவலகம் இயங்கும் நாளாக இருந்தாலும் காலை நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட போது அங்கு சிக்கி இருந்த ஒரு ஊழியரையும் தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர்.
கட்டிடத்தில் இருந்து கரும்புகை வெளியேறி வருவதால் தீயை அணைப்பது சவாலாக உள்ளது.
விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின் கசிவு ஏற்பட்டதே தீ விபத்துக்கு காரணம் என்று முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
மின்வாரிய சேவை பாதிப்பு
சென்னையில் உள்ள BSNL அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் மின் வாரிய இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பம், பணம் செலுத்துதல், புகார் பதிவு உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சிக்கலை நிவர்த்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக டான்ஜெட்கோ (TANGEDCO) தெரிவித்துள்ளது.
