கரூர் பெருந்துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ பதிவு செய்த எப்ஐஆர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கரூர் வேலுச்சாமி புரத்தில் கடந்த 27 ஆம் தேதி அன்று நடிகர் விஜய் கலந்து கொண்ட தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து விசாரணை மேற்கொண்டது.
இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் எஸ்.ஐ.டி குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் ஒரு குழு அமைத்து சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார் தலைமையில் ஏடிஎஸ்பி முகேஷ்குமார், டிஎஸ்பி ராமகிருஷ்ணன் அடங்கிய சிபிஐ அதிகாரிகள் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ தரப்பில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர். கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
