சனாதன தர்மத்தை ஒழிப்போம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்காக அவர்மீது மகாராஷ்டிரா மாநிலத்தில் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.
அப்போது, ”டெங்கு, மலேரியா, காலரா போன்ற தொற்று நோய் சனாதனம். அதனை வெறுமனே எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும்” என அவர் பேசினார்.
அமைச்சர் உதயநிதியின் இந்த பேச்சு பத்து நாட்களை கடந்த பின்னும் அரசியல் வட்டாரத்தில் நாடு முழுவதும் சர்ச்சையாக நீடித்து வருகிறது.
இதுவரை உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக டெல்லி பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
உத்தரப்பிரதேசத்தின் அயோத்தி சாமியார் ஒருவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ10 கோடி விலை அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கிடையே பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன எதிர்ப்பு பேச்சு குறித்து விவாதித்தது.
அதில், சனாதன தர்மத்தின் மீதான தாக்குதலை தீவிரமாக எதிர்கொள்ளுமாறு அவர் தனது அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியதாக செய்திகள் வெளியாகின.
இதனையடுத்து சனாதன தர்மம் குறித்து உதயநிதி என்ன பேசினார் என்று தெரியாமல் பிரதமர் மோடி கருத்து தெரிவிப்பது அநியாயம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.
மேலும் இதனை வைத்து திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கு எதிராகவும் பாஜக கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
அதேவேளையில், இந்தியா கூட்டணிக்குள்ளும் உதயநிதியின் பேச்சுக்கு ஆதரவும், கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டன.
மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், கர்நாடகா அமைச்சர் பிரியங்கா கார்கே, உதயநிதியின் கருத்தை ஆதரித்து பேசியிருந்தார்.
எனினும் தமிழ்நாடு பாஜக இந்த பிரச்சனையை தொடர்ந்து கையில் எடுத்து பேசி வருகிறது. கடந்த 11ஆம் தேதி உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக போராட்டமும் நடத்தினர்.
இதற்கிடையே மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அவர்மீது இரு சமூகங்களிடையே மோதலை உருவாக்குதல் (153 ஏ), மத உணர்வுகளைப் புண்படுத்துதல் (295 ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் மும்பை மீரா ரோடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
துப்பாக்கி சண்டை: ராணுவ வீரரை பாதுகாக்க உயிர் தியாகம் செய்த நாய்!
வேலைவாய்ப்பு : BHEL நிறுவனத்தில் பணி!