முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான நிதி முறைகேடு வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி, சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் 98.25 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. திமுக மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தொடர்புடைய நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதோடு ஆறு வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி புகார்தாரரான அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (செப்டம்பர் 1) விசாரணைக்கு வந்தது.
அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், டெண்டர் முறைகேடு தொடர்பாக கோவை மாநகராட்சி துணை ஆணையராக இருந்த காந்திமதிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி அளித்து தமிழக அரசு ஆகஸ்ட் 30ஆம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜ் திலக், மேலும் இரு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி பெற வேண்டியுள்ளது என்று வாதிட்டார்.
இதையடுத்து, அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளில் மட்டும் ஏன் இவ்வளவு கால தாமதம் ஆகிறது என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து அரசு நிதி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதி, முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளில் குறிப்பாக நிதி முறைகேடு தொடர்பான வழக்குகளில் காவல்துறையினர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
