தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன், நடிகர் நாக சைதன்யாவை காதலித்து சமந்தா திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண வாழ்வில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாட்டால் கடந்த 2021-ம் ஆண்டு இருவரும் பரஸ்பரம் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.
இந்த நிலையில், தெலங்கானாவின் வனத்துறை அமைச்சர் கோண்டா சுரேகா அளித்த ஒரு பேட்டியில், ”சமந்தா மீது தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகனும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமராவ் விருப்பம் கொண்டார். அவரது ஆசைக்கு இணங்குமாறு நாகார்ஜுனாவின் குடும்பமே சமந்தாவை வற்புறுத்தியது.
நாகர்ஜுனா குடும்பத்தின் செயல்களை ஏற்காத சமந்தா, நாக சைதன்யாவை பிரிந்து விட்டார் என்று கூறியிருந்தார். அமைச்சர் கொண்டா சுரேகாவின் பேட்டி வைரலான நிலையில், சமந்தா, நாகர்ஜுனா, சிரஞ்சீவி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்திருக்கின்றனர்.
தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை அரசியலுக்கு இழுப்பது சரியானது அல்ல. பொது மக்கள், குறிப்பாக உங்களைப் போன்ற பொறுப்புள்ள பதவிகளில் இருப்பவர்கள், கண்ணியத்தையும் தனிநபர்களின் உரிமையையும் காக்க வேண்டும்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சொல்வது, குறிப்பாக அதே பார்வையில் சினிமாவுலகை பார்ப்பது வருத்தமளிக்கிறது. மற்றவர்கள் நமக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறும்போது நாம் அமைதியாக இருக்க மாட்டோம். இது போன்ற பொறுப்பற்ற பேச்சை இயல்பாக ஏற்றுக் கொண்டு கடந்து விட முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
‘நான் ஈ’ உள்ளிட்ட பல படங்களில் நடிகை சமந்தாவுடன் நடித்த பிரபல தெலுங்கு நடிகர் நானி. தன் எக்ஸ் பக்கத்தில், ”எப்பேர்ப்பட்ட முட்டாள்தனமான கருத்தை பேசினாலும் தப்பித்து விடலாம் என்று கருதும் அரசியல்வாதிகளைப் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தனது பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்த நிலையில், இன்று காலை சுரேகா மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
சமந்தா விவாகரத்து குறித்து பேச்சு: மன்னிப்பு கேட்ட தெலங்கானா அமைச்சர்!