எல்லை தாண்டிப் போராடும் வீரர்களின் கதை!
பொதுவாகக் காவல் துறை சார்ந்த திரைப்படங்கள் வருமளவுக்குப் பிற அரசுத் துறைகள் பற்றி, பாதுகாப்பு படைகள் பற்றிப் படங்கள் பேசுவதில்லை. எல்லா மக்களையும் எளிதில் சென்றடைந்ததாக இருப்பது நன்று என்றெண்ணுவது அதற்கான காரணமாக இருக்கலாம். அதனை மீறிச் சில கலைஞர்கள் வேறு சில களங்களைப் பூதாகரமாகத் திரையில் காட்ட ஆசைப்படுவார்கள்.
அந்த வகையில், இந்திய விமானப்படையினரின் செயல்பாடுகளைச் சொல்லுகிறது ‘பைட்டர்’. ஹ்ரித்திக் ரோஷன், தீபிகா படுகோனே, அனில் கபூர், கரன்சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் திரைக்கதையை ரமோன் சிப் எழுதியிருக்கிறார். இவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.
சித்தார்த் ஆனந்த் இதனை இயக்கியுள்ளார். விமானப்படையில் பயன்படுத்தப்படும் விமானங்களையும் அதனை இயக்கும் வீரர்களையும் மட்டுமே பிரதானப்படுத்துகிறது இதன் திரைக்கதை.
சரி படம் எப்படியிருக்கிறது?
அந்தரத்தில் நிகழும் தாக்குதல்!
விமானப்படையில் ஸ்குவாட்ரன் லீடர் அந்தஸ்தில் இருப்பவர்களைக் கொண்ட குழுவுக்குத் தலைமை வகிக்கிறார் குரூப் கேப்டன் ராகேஷ் (அனில் கபூர்). அவரது குழுவில் சம்ஷேர் (ஹ்ரித்திக்), மினாள் (தீபிகா படுகோனே), சர்தாஜ் கில் (கரன் சிங்), பஷீர் (அக்ஷய் ஓபராய்), சுக்தீப் (பன்வீன் சிங்) உள்ளிட்டோர் அங்கம் வகிக்கின்றனர். வெவ்வேறுவிதமான பின்னணி கொண்ட இவர்கள் அனைவரும் ராகேஷ் தலைமையின் கீழ் ஒரு குழுவாகப் பயிற்சி பெறுகின்றனர்.
ஒருமுறை விடுமுறையைக் கொண்டாடும் நோக்கில் ஜம்முவில் இருக்கும் சம்ஷேர் வீட்டிற்குச் சென்றுவிட்டு, அக்குழுவினர் ஸ்ரீநகரில் இருக்கும் விமானப்படை தளத்திற்குத் திரும்புகின்றனர். வழியில் ஆயுதப்படை வீரர்கள் வாகனங்களில் அணிவகுத்துச் செல்வதைக் காண்கின்றனர்.
சில மணி நேரங்கள் கழித்து, புல்வாமாவில் நடந்த தாக்குதலில் அவர்களில் சிலர் கொல்லப்படுகின்றனர். அதற்குக் காரணமான தீவிரவாதி வெளியிட்ட வீடியோ இந்தியப்படையினருக்குக் கிடைக்கிறது. அதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கும் பாலக்கோடு எனுமிடத்தில் செயல்படும் தீவிரவாதிகள் முகாமை ஒழிக்கத் திட்டமிடுகிறது இந்திய விமானப்படை.
ராகேஷ் தலைமையில் செயல்படும் அந்த ஆபரேஷனில் அவரது மொத்தக் குழுவினரும் ஈடுபடுகின்றனர். குறி வைத்தது போலவே, அந்த முகாமைத் தாக்கி அழிக்கின்றனர். இடையில் ஏற்பட்ட தகவல்தொடர்பு கோளாறு காரணமாக சம்ஷேர் மற்றும் சர்தாஜின் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் சிக்கிக் கொள்கின்றன.
கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் அதிகாரிகள், அவர்களைத் திரும்பி வருமாறு உத்தரவிடுகின்றனர். ஆனால், அதற்குள் நிலைமை கைமீறிப் போகிறது. சர்தாஜும் அவருடன் சென்ற பஷீரும் பாகிஸ்தான் பிடியில் சிக்கிக்கொள்கின்றனர். நடந்த தவறுக்கு சம்ஷேர் மட்டுமே காரணம் என்று குற்றம்சாட்டுகிறார் ராகேஷ்.
அதன்பிறகு என்னவானது? சர்தாஜும் அவருடன் சென்றவரும் உயிர் பிழைத்தார்களா? சம்ஷேர் என்ன செய்தார்? அவரைக் கண்டாலே ராகேஷ் கோபமுறுவது ஏன்? இது போன்ற பல கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது ‘பைட்டர்’ படத்தின் இரண்டாம் பாதி.
இடைவேளை மற்றும் கிளைமேக்ஸில் வரும் சண்டைக்காட்சிகளில், அந்தரத்தில் விமானங்களின் தாக்குதல் நடப்பதாகக் காட்டப்படுகிறது. அது சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதைக் காண்பதற்காகவே, இந்த படத்திற்குத் தாராளமாகச் செல்லலாம்.
சிறப்பான விஎஃப்எக்ஸ்!
ஆக்ஷன் படங்கள் என்றாலே நாயகன், நாயகியை ஸ்டைலாக, ஒயிலாக நடந்து வருவதாக ஷாட்களை வாரியிறைத்து விடுவார்கள். இது தவிர தலையைச் சிலுப்புவது தொடங்கி மூர்க்கத்துடன் மோதத் தயாராவது வரை அனைத்தும் ‘ஸ்லோமோஷனில்’ காட்டப்படும். இவையனைத்துக்கும் மேலாக, விஎஃப்எக்ஸ் துருத்தலாகத் தெரியாதவாறு நேர்த்தியான காட்சியாக்கம் அமைந்திருக்க வேண்டும். அந்த வகையில் மிகச்சிறப்பான விஎஃப்எக்ஸ் உடன் நல்லதொரு ஆக்ஷன் படம் பார்த்த திருப்தியை வழங்குகிறது ‘பைட்டர்’.
இந்திப் படங்கள் என்றாலே ‘ஹோலி’ கொண்டாடுவது போல வண்ணமயமான பிரேம்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் என்ற காலம் மலையேறிவிட்டது. திரைக்கதை ட்ரீட்மெண்டுக்கு ஏற்றாற்போல ஒளிப்பதிவை அமைப்பதுதான் இப்போதைய பாணி. அந்தவகையில் விமானப்படை தளம், பயிற்சி மையம், பணியாளர்கள் தங்கியிருக்கும் இடம், அவர்கள் இயக்கும் விமானங்கள் என்று படம் முழுக்க நீலம், பச்சை சார்ந்த வண்ணங்களே அதிகம் இடம்பெறுமாறு பார்த்துக் கொண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சட்சித் பௌலோஸ்.
தயாரிப்பு வடிவமைப்பாளர் ரஜத் பொடாரின் குழு அதற்குப் பெருமளவில் உதவியிருக்கிறது. ஆடை வடிவமைப்பு, ஒப்பனை துறைகளும் அதற்குப் பக்கபலமாக நின்றிருக்கின்றன.
படத்தொகுப்பாளர் ஆரிஃப் ஷெய்க், மிகக்கவனமாகப் படத்தைத் தொகுத்திருக்கிறார். கதையில் இருந்து விலகிப் பிசிறாக ஒரு பிரேம் கூட தனியாகத் தெரிந்துவிடக்கூடாது என்று மெனக்கெட்டிருக்கிறார். அதையும் மீறி, காதலையும் பாசத்தையும் சுட்டும் சில செண்டிமெண்ட் காட்சிகள் அயர்ச்சி தருகின்றன.
விமானப்படை செயல்பாடுகள் மட்டுமல்லாமல், கமர்ஷியல் படத்திற்கும் ஏற்ற வகையில் படத்தின் ‘காஸ்ட்டிங்’கை கையாண்டிருக்கிறார் முகேஷ் சாப்ரா.
விஷால் – சேகர் இணையின் பாடல்கள் வழக்கமான இந்திப் பட பாடல்களைக் கேட்ட அனுபவத்தையே ஊட்டுகின்றன. ஆனால், பின்னணி இசையில் அங்கித் மற்றும் சஞ்சித் பல்ஹரா இணை காட்சிக்கு காட்சி விறுவிறுப்பை ஊட்டியிருக்கிறது.
பேங் பேங், வார், பதான் போன்ற ஆக்ஷன் படங்களின் வரிசையில் தற்போது ‘பைட்டர்’ தந்திருக்கிறார் சித்தார்த் ராஜ் ஆனந்த். மிகப்பிரமாண்டமான படங்களில் ரசிகர்களை உணர்ச்சிவசப்பட வைக்கும் காட்சிகளும் பிரமிக்கவைக்கும் காட்சிகளும் என்ன விகிதத்தில் இணைந்திருக்க வேண்டுமென்ற கணக்கு அவருக்குக் கச்சிதமாகத் தெரிந்திருக்கிறது. ‘பதான்’ போலவே, அதன் விளைவு இப்படத்திலும் தெரிகிறது.
வரவேற்பு எப்படி?
இந்தியில் இருந்து தமிழில் ‘டப்பிங்’ செய்யப்படும் படங்கள் தியேட்டர்களில் பெரிய வரவேற்பைப் பெறுவதில்லை. ஜவான் படத்தை எடுத்துக்கொண்டால், ஷாரூக்கை விட அட்லிக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பே அது தமிழில் வெளியாகக் காரணமாக இருந்தது. அதனாலேயே என்னவோ, இப்படத்தைத் தமிழில் ‘டப்’ செய்யவில்லை.
படம் முழுக்க உயர்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகக் கதாபாத்திரங்கள் காட்டப்பட்டதும், எல்லைப்பகுதியில் நிகழும் விமானத் தாக்குதல்களைக் கொண்டிருந்ததும் கூட அதற்குக் காரணங்களாக இருக்கலாம். ஆனால், ஓடிடியில் வெளியாகும்போது நிச்சயம் இப்படம் தென்னிந்திய மொழிகளில் ‘டப்’ செய்யப்படும். காரணம், தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடும் இந்திய வீரர்கள் என்ற அம்சம் இருப்பது தான்.
அதனால், வசனங்கள் பல இடங்களில் தீப்பிழம்புகளாகத் தெறிக்கின்றன. சில இடங்களில் ‘சீரியல்கள்’ போல ‘ஓவர் ஆக்டிங்’ தென்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத்தையும் அங்குள்ள தீவிரவாத இயக்கங்களையும் சூறையாடுவதாக வரும் இடங்களில் தியேட்டரில் ‘சத்தம்’ காதைப் பிளக்கிறது. தியேட்டருக்கு வர விரும்பாதவர்களும் அக்காட்சிகளைக் கண்டு குதூகலிக்க ஓடிடியே சிறந்த வழி.
‘பைட்டர்’ படத்தை ஒருவர் தமிழில் பார்க்க நேர்ந்தால், அதன் கதையோ, காட்சிகளோ, வசனங்களோ, பாடல்களோ பிரமிப்பைத் தராது. அதேநேரத்தில், எல்லைப்பகுதியைத் தாண்டி விமானத்தில் சென்று ஒரு குழுவினர் தாக்குதல் நடத்துகின்றனர் என்பது ஈர்ப்பைத் தரும். கூடவே, செய்திகளில் இடம்பெற்ற புல்வாமா, பாலக்கோடு சம்பவங்களைத் திரைக்கதை தொட்டுச் செல்வது நிச்சயம் கவனத்தைக் கவரும்.
அனைத்துக்கும் மேலே, விமானப்படையினரின் தினசரி வாழ்வை லேசுபாசாகச் சொன்ன வகையில் புதுவித அனுபவத்தை ஊட்டுகிறது ‘பைட்டர்’. கங்கனா நடித்த ‘தேஜாஸ்’ படத்தைக் காட்டிலும், இதில் ஆக்ஷன் எபிசோடுகள் முழு திருப்தியைத் தருகின்றன. அந்த வகையில், விமானப்படை தொடர்பாகப் பல படங்கள் வெளியாவதற்கு ‘பைட்டர்’ ஒரு தொடக்கமாக அமையக்கூடும். தென்னிந்திய மொழிகளில் விஜயகாந்த், அர்ஜுன் படங்களை ‘ஹைடெக்’காக மறு உருவாக்கம் செய்ய முனைபவர்களுக்கு இப்படம் நல்லதொரு பாடமாக இருக்கும்.
மற்றபடி, இது ஒரு கமர்ஷியல் படம் என்பதை நினைவில் கொண்டு லாஜிக் மீறல்களை டன் கணக்கில் ஒதுக்கித் தள்ள வேண்டியிருக்கும். அதனை மட்டும் செய்துவிட்டால், வேகத்தைக் குறைத்தும் கூட்டியும் சில நேரங்களில் ஓய்வை நுகர்ந்துவிட்டுத் தொடரும் பயணம் போன்ற அனுபவத்தை இந்த ‘பைட்டர்’ வழியே பெறலாம்.
உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதய் பாடகலிங்கம்
இஸ்ரேல் – பாலஸ்தீனப் போரின் பூகோள அரசியல் பொருளாதாரம்! – பகுதி 2
Comments are closed.