22-வது உலக கோப்பை கால்பந்து தொடரை பிரம்மாண்டமாக நடத்த உள்ள கத்தார் அடுத்தடுத்து பல வரலாற்று பெருமைகளை தன்வசமாக்கியுள்ளது.
இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு எந்த அளவிற்கு ஆதரவு உள்ளதோ, அதே போன்று உலகளவில் மிகப்பெரிய அளவில் ரசிக்கும் விளையாட்டாக கால்பந்து உள்ளது.
இதனை கொண்டாடும் விதமாக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) கால்பந்து உலகக்கோப்பை தொடரை நடத்துகிறது.
கடந்த 2018ம் ஆண்டு ரஷ்யாவில் நடத்தப்பட்ட உலகக்கோப்பையில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.

முதல் மத்திய கிழக்கு நாடு!
இதனை தொடர்ந்து வரும் 20ம் தேதி தொடங்கும் இந்த கால்பந்து திருவிழாவை கோலாகலமாக நடத்த கத்தார் முழு அளவில் தயாராகி உள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றது கத்தார்.
இதன்மூலம் வரலாற்றில் முதன் முறையாக உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் மத்திய கிழக்கு நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது கத்தார்.

அதிக பொருட்செலவு!
இதுவரை உலகக்கோப்பை தொடரை நடத்த அதிகபட்சமாக 2018-ம்ஆண்டு ரஷ்யா 14 பில்லியன் டாலர் செலவு செய்திருந்தது. அந்த சாதனையையும் முறியடித்துள்ளது கத்தார்.
தமிழகத்தை விட குறைந்த மக்கள் தொகையை கொண்ட கத்தார், இந்த உலகக்கோப்பை தொடருக்காக 220 பில்லியன் டாலர் செலவழிக்க உள்ளது.
இதன் மூலம் அதிக பொருட்செலவில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடத்தும் நாடு என்ற வரலாற்று பெருமையை கத்தார் பெற்றுள்ளது.
குளிர்காலத்தில் உலகக்கோப்பை!
மேலும் உலகக் கோப்பை தொடரானது வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் தான் நடத்தப்படும்.
ஆனால் இந்த மாதங்களில் கத்தாரில் 40 முதல் 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவும் என்பதால் குளிர்காலத்தில் போட்டிகள் நடத்தப்படுகிறது.
இதன் மூலம் குளிர்காலத்தில் உலகக்கோப்பை தொடரை நடத்தும் முதல் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது கத்தார்.

முதல் மற்றும் இறுதிப்போட்டி!
வரும் 20ம் தேதி முதல் டிசம்பர் 18ம் தேதி வரை என ஒருமாத காலம் இந்த பிரம்மாண்ட தொடரில் சாம்பியன் கோப்பையை கைப்பற்றுவதற்காக 32 அணிகள் மோதுகின்றன. இதற்காக மொத்தம் 64 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
60 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் கட்டப்பட்டுள்ள அல் பேத் மைதானத்தில் வரும் 20ம் தேதி கால்பந்து உலகக்கோப்பையின் தொடக்க ஆட்டம் நடைபெறுகிறது.
இதில் போட்டியை நடத்தும் கத்தார், ஈக்வேடார் அணியை எதிர்கொள்கிறது.
டிசம்பர் 18ம் தேதி நடக்கும் இறுதிப்போட்டியானது 80 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் நவீன வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள லுசைல் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதுவே கத்தாரில் உள்ள மிகப்பெரிய கால்பந்து ஸ்டேடியம் ஆகும்.
கிறிஸ்டோபர் ஜெமா
அடுத்த ரவுண்டு : உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
சர்ச்சையில் சிக்கிய பிரதீப்… துணிந்து வாய்ப்புக் கேட்ட பிரேம்ஜி