நாடாளுமன்ற மக்களவையில் இன்று டிசம்பர் 10-ந் தேதி விவாதங்கள் அனல் பறந்தன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் மக்களவையில் வெளிநடப்பு செய்தனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான விவாதத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:
- SIR நடைமுறையை நீங்கள் இப்போது எதிர்க்கிறீர்கள்.. பீகாரில் நடந்ததை போல மேற்கு வங்கத்திலும் தமிழகத்திலும் காங்கிரஸ் தோற்கத்தான் போகிறது.. இதை எழுதியே வைத்துக் கொள்ளுங்கள்
- நாங்கள் வாக்குத் திருட்டில் ஜெயிக்கவில்லைநீங்கள் ராமர் கோவில் கட்டியதை எதிர்த்தீர்கள்.. அதனால் எங்களுக்கு வெற்றி கிடைத்தது
- நீங்கள் ஜம்மு காஷ்மீருக்கான 370-வது பிரிவு ரத்து செய்ததை எதிர்த்தீர்கள் .. அதனால் நாங்கள் வென்றோம்
- பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூரை எதிர்த்தீர்கள்.. அதனால் ஜெயித்தோம்
- முத்தலாக்கை தடை செய்த போது எதிர்ப்பு தெரிவித்தீர்கள்.. அதனாலும் நாங்கள் வென்றோம்
- குடியுரிமை திருத்த சட்டத்தை நீங்கள் எதிர்த்த போதும் வென்றோம் நாங்கள்
- ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை நீங்கள் எதிர்க்கிறீர்கள்.. மீண்டும் நாங்களே வெல்வோம்
- ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு பதவி தருவதை ஏன் எதிர்க்கின்றன எதிர்க்கட்சிகள்?
- இந்தியாவின் சட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். காரர்களுக்கு பதவி தரக் கூடாது என எழுதப்பட்டுள்ளதா?
- இந்த தேசத்தின் பிரதமர் நரேந்திர மோடியே ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர்தான்.. நானும் ஒரு ஆர்.எஸ்.எஸ். காரர்தான்.
- ஜவஹர்லால் நேரு, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி இந்த அவையில் பேசினார்கள். ராகுல் காந்தி வியட்நாமில் இருந்தார்.. ராகுலைப் போல பயந்து ஓடியவர்கள் யாருமே இல்லை.
- ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு என்றால் எப்படி நடத்த வேண்டும்? என்பது கூட ராகுல் காந்திக்கு தெரியவில்லையே..
- 2001-ம் ஆண்டு காலம் முதல் பிரதமர் நரேந்திர மோடியுடன் நெருக்கமாக இருக்கிறேன்.. இந்த நாட்டுக்காக நாள்தோறும் பணியாற்றுகிறார்.. ஒரு நாளும் விடுமுறை எடுத்ததே இல்லை.
- மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலம்தானே 2004, 2009 மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்றன; அப்போது காங்கிரஸ்தானே வென்றது.. ஆனால் நாங்கள் வெற்றி பெறும் போது மட்டும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகங்களை எழுப்புவது ஏன்?
இவ்வாறு அமித்ஷா ஆவேசமாக பேசினார்.
ராகுல் காந்தி சவால்
அமித்ஷாவின் பேச்சின் போது குறுக்கிட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வாக்கு திருட்டு குறித்து வெளிப்படையான விவாதத்துக்கு நீங்கள் தயாரா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமித்ஷா, நான் சொல்லும் பதிலைக் கேட்க ராகுல் காந்திக்கு தைரியம் வேண்டும்.. தமிழ்நாடு, தெலுங்கானா, மேற்கு வங்கத்தில் நாங்கள் வெல்லவில்லை.. ஆனால் நாங்கள் வெற்றி பெறும் போது தேர்தல் ஆணையத்தின் மீது பழி போடுகின்றனர்.. இந்திய குடியுரிமையை பெறுவதற்கு முன்னரே சோனியா காந்தி வாக்களித்தார் என்றார் அமித்ஷா.
மக்களவையில் இருந்து வெளிநடப்பு
சோனியா காந்தி குறித்த கருத்தை கடுமையாக எதிர்த்த காங்கிரஸ் கட்சியின் வேணுகோபால், இதனை நிரூபிக்க முடியுமா? என சவால் விட்டார்.
அமித்ஷா கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்த போது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது, ஆளும் கட்சி எம்.பிக்கள், “பதில் சொல்ல முடியாமல் ஏன் ஓடுகிறீர்கள்?” என கிண்டல் செய்தனர்.
