20 ஆண்டுகளில் இல்லாத மழை… புதுவையை புரட்டிப் போட்ட ‘ஃபெஞ்சல்’ புயல்!

Published On:

| By Selvam

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல், நேற்று (நவம்பர் 30) மாலை 5.30 மணியில் இருந்து இரவு 11.30 மணி வரை 6 மணி நேரமாக புதுச்சேரி பகுதியில் கரையைக் கடந்தது.

இதனால் 20-ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு புதுவையில் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. கடந்த 2004-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி, புதுவையில் 21 செ.மீ மழை பதிவானது தான் அதிகபட்ச மழைப்பொழிவாக இருந்தது.

ஆனால், ஃபெஞ்சல் புயல் காரணமாக, புதுவையில் நேற்று மட்டும் 46 செ.மீ மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் இன்று (டிசம்பர் 1) தெரிவித்துள்ளார்.

ஃபெஞ்சல் புயல் காரணமாக, புதுவை கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது. புதுச்சேரி உருளையன்பேட்டை பகுதியில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மோகன்நகர் அருகே உள்ள கனகன் நகர் ஏரி நிரம்பி, உபரிநீர் வெளியேறியதால், நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது.

அதேபோல, பாரதி வீதி, பெட்டிக்கேனல் வீதி பகுதிகளில் வாய்க்கால் நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானர்கள். வினோபாநகரில் மின்கம்பம் விழுந்து வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ சேதமடைந்தது.

கனமழை காரணமாக, புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் தற்காலிக நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டுள்ளது. புதுவையில் இயல்பு நிலை இன்னும் திரும்பாத நிலையில், அனைத்து திரையரங்குகளும் இன்று இரண்டாவது நாளாக மூடப்பட்டுள்ளது.

அதேபோல, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் பாத்திரங்களைக் கொண்டு தண்ணீரை வெளியேற்றினர்.

திண்டிவனத்தில் உள்ள பெரிய ஏரியில் இருந்து மழை நீர் வெளியேறியதால், ரயில்வே தரைப்பாலம் மூழ்கியது. இதனால் கோட்டைமேடு, பூதேரி, கொல்லிமேடு பகுதிகளுக்கு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டது.

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது. கடலூர் மத்திய பேருந்து நிலையம், விழுப்புரம் பேருந்து நிலையங்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் பேருந்து நிலையத்திற்கு வெளியே பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச்சென்றனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ்: கரையைக் கடந்த ‘ஃபெஞ்சல் புயல்’ முதல் சிலிண்டர் விலை உயர்வு வரை!

12 வருஷம் 2 மாசம் 1 நாள்… அமரன் இயக்குநரை பாராட்டிய விஜய்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share