16 அடி ராஜ நாகத்தை பெண் வனத்துறை அலுவலர் அசால்ட்டாக பிடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. female forest officer roshini
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கரமண ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியை ஒட்டியுள்ள இடம்தான் ‘பேப்பரா’. இங்கு வனவிலங்கு சரணாலயம் ஒன்றும் அமைந்துள்ளது. இந்த ஓடையில் அந்த பகுதி மக்கள் குளிப்பது, துணி துவைப்பது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று அந்த பகுதியில் ஒரு ராஜநாகம் சுற்றித் திரிந்துள்ளது. இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் வனத்துறை மற்றும் மீட்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலின் பேரில் 5 பேர் கொண்ட வனத்துறை குழு ஒன்று பாம்பை பிடிக்க சென்றது. அதில் ஒருவர்தான் வனத்துறை அதிகாரி ‘ரோஷினி’. இவர், அந்த ராஜநாகத்தை பிடிக்க கையில் ஒரு தடி மற்றும் பையுடன் களமிறங்கினார்.
தான் வைத்திருக்கும் பையின் வாயில் பாம்பின் தலையை நுழைக்க சில நிமிடங்கள் போராடினார். ஒருகட்டத்தில் அந்த பாம்பிடம் அதிகாரி ரோஷினி, “ப்ளிஸ்” என்று கேட்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதைதொடர்ந்து அந்த பைக்குள் பாம்பு தலை நுழைந்ததும், அதன் வால் பகுதியை பிடித்து முழுவதுமாக பைக்குள் அடைத்தார். பாம்பு பிடிபட்ட பிறகுதான் அந்த பகுதி மக்கள் பெருமூச்சு விட்டனர்.
இந்தநிலையில், ரோஷினி பாம்பை பிடிக்கும் வீடியோவை முன்னாள் வனத்துறை அதிகாரி, சுஷாந்த நந்தா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “வன ராணிக்கும் அவரது துணிச்சலுக்கும் வணக்கம். 16 அடி ராஜ நாகத்தை பிடித்துள்ளார். இதற்கு முன்னாள் இவர் 800 பாம்புகளை பிடித்திருந்தாலும், இப்போதுதான் முதன்முறையாக ராஜ நாகத்தை பிடித்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த ராஜநாகம் 20 கிலோ எடை கொண்டது என்றும் நேற்று 12.30 மணியளவில் பிடிக்கப்பட்ட இந்த பாம்பு பாதுகாப்பாக வனப்பகுதியில் விடப்பட்டதாகவும் ரோஷினி ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
ரோஷினிக்கு பாராட்டுகள் குவிந்து வரும் அதேவேளையில், அவர் பாம்பை பிடிப்பதை பார்க்கும் போது அனுபவற்றவர் போல் இருக்கிறார். இதுபோன்ற ராஜநாகத்தை பிடிக்க இன்னும் அனுபவம் தேவை என்று சில சமூக வலைதளவாசிகள் கூறி வருகின்றனர்.
இந்தநிலையில், பாலைவனமாதலைத் தடுக்கும் மாநாட்டின் (UNCCD) இயக்குனர் முரளி தும்மருகுடி, ”ஒரு ராஜநாகத்தை அந்த பெண் அதிகாரி முதன்முறையாக பிடிக்கிறார் என்பதை அறிந்ததும் அவர் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டானது” என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். female forest officer roshini
