யுடியூபர் சவுக்கு சங்கரின் சர்ச்சைக்குரிய பேட்டியை ஒளிபரப்பிய ரெட் பிக்ஸ் யுடியூப் சேனலின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டை போலீசார் இன்று (மே 13) திருச்சி அழைத்துச் சென்றுள்ளனர்.
பெண் காவலர்களை இழிவு படுத்தி பேட்டி ஒன்றில் பேசிய சவுக்கு சங்கர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது மேலும் சில வழக்குகள் தொடுக்கப்பட்டு நேற்று சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் சட்டமும் பாய்ந்திருக்கிறது.
இதற்கிடையில் பெலிக்ஸ் ஜெரால்டு முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, ‘அந்த பேட்டியை ஒளிபரப்பிய பெலிக்ஸ் தான் ஏ1 ஆக சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்’ என்ற கருத்து தெரிவித்து முன்ஜாமின் மனுவை ஒரு வார காலம் ஒத்தி வைத்திருந்தார்.
இதற்கு இடையே நேற்று முன்தினம் மே 11ஆம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி பிரஸ் கவுன்சிலில் முறையிட சென்றிருந்த பெலிக்ஸை டெல்லியில் வைத்து திருச்சி மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தான் கைது செய்யப்பட்ட தகவலை தனது மனைவிக்கு பெலிக்ஸ் அலைபேசி மூலம் தெரிவித்திருக்கிறார். ஆனால் அதன் பிறகு 24 மணி நேரத்திற்கும் மேலாக தனது கணவரின் நிலை பற்றி தனக்குத் தெரியவில்லை என்று ஃபெலிக்ஸ்சின் மனைவி திருச்சி எஸ்.பி. ஆபீஸில் நேற்று முறையிட்டார்.
இந்த நிலையில் டெல்லியில் இருந்து ரயில் மூலமாக இன்று காலை சென்னை அழைத்துவரப்பட்ட பெலிக்ஸ், இன்று காலை சென்னையில் இருந்து போலீஸ் வேன் மூலம் திருச்சி கொண்டு செல்லப்படுகிறார்.
இன்று அவர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.
வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வசூல் வேட்டையில் அரண்மனை 4… தாக்குப் பிடிக்குமா கவினின் ஸ்டார்!